'முடக்க ஆணையை மீறினால் சுட்டுத்தள்ளுங்கள்'

'முடக்க ஆணையை மீறினால் சுட்டுத்தள்ளுங்கள்'

2 mins read
8a718afb-5706-4f1e-b4d6-08f211c30500
நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அரும்பாடுபட்டு வரும் வேளையில், தனிமைப்படுத்தப்படும் உத்தரவை நாட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடித்து ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அதிபர் டுட்டர்டே கேட்டுக்கொண்டார். படம்: இபிஏ -

கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிலிப்பீன்ஸ் நாடு முடக்கப்பட்டுள்ள வேளையில் முடக்க ஆணையை மீறுவோர் சுட்டுத்தளப்படலாம் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே எச்சரித்துள்ளார்.

தொலைக்காட்சியில் இன்று (ஏப்ரல் 2) உரையாற்றிய அவர், மருத்துவ ஊழியர்களைத் தவறாக நடத்துவது மிகக் கடுமையான குற்றம் என்றும் அது ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அரும்பாடுபட்டு வரும் வேளையில், தனிமைப்படுத்தப்படும் உத்தரவை நாட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடித்து ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அதிபர் கேட்டுக்கொண்டார்.

பிலிப்பீன்சில் இதுவரை கொரோனா கிருமித்தொற்று 107 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. 2,633 பேரைக் கிருமித்தொற்று பீடித்துள்ளது. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கருமித்தொற்றுக்கு ஆளாகின்றனர்.

இன்று ஒரே நாளில் அங்கு 11 புதிய மரணங்களும் 322 புதிய கிருமித்தொற்று சம்பவங்களும் பதிவாகின.

"நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த போலிசுக்கும் ராணுவத்துக்கும் எனது கட்டளை என்னவென்றால், கட்டுப்பாட்டை மீறுவோரால் பிரச்சினை ஏற்பட்டு, அவர்கள் உங்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்த முற்பட்டால், அவர்களைச் சுட்டுத்தள்ளுங்கள்," என்று அதிபர் கூறினார்.

மணிலாவில் ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதியில் அரசாங்க உணவு உதவி தொடர்பில் அங்குள்ள குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் சிலர் கைது செய்யப்பட்ட பிறகு, அதிபர் டுட்டர்டேயின் இக்கடும் எச்சரிக்கை வெளியானது.

கிருமித்தொற்றின் தொடர்பில் மருத்துவ சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புணர்ச்சி அதிகரித்து வருவதால் அவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் தாக்கப்படுகின்றனர். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதிபர் ஆணித்தரமாகக் கூறினார்.

அதிபரின் இந்த ஆணை, வன்முறையைத் தூண்டக்கூடும் என்று மனிதாபிமான ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்குமுன் இதுபோன்ற ஆணையை அதிபர் டுட்டர்டே, போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தினார்.

அதில் போலிசாரும் மர்ம நபர்களும் போதைப்பொருளை விற்கும் அல்லது பயன்படுத்தும் பல்லாயிரக்கணக்காணோரைக் கொன்று குவித்தனர்.

ஆனால், அது சட்டத்தின்படிதான் மேற்கொள்ளப்பட்டது என்றும் போலிசார் தங்கள் செயல்களை அப்போது தற்காத்துப் பேசினர்.

"அதிபர் டுட்டர்டேயின் எச்சரிக்கை பொது ஒழுங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. தவிர, யாரும் இதன் தொடர்பில் சுடப்படமாட்டார்கள்," என்று பிலிப்பீன்ஸ் தேசிய போலிஸ் படையின் தலைவர் தெரிவித்தார்.

#பிலிப்பீன்ஸ் #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்