சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 10) புதிதாக 198 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,108 ஆகியுள்ளது. இன்று உறுதிசெய்யப்பட்ட அனைத்து சம்பவங்களும் உள்ளூர் கிருமுத்தொற்று சம்பவங்கள்.
அத்துடன், 86 வயது சிங்கப்பூர் பெண்மணி கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்ட சிக்கல்களால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்ட 987ஆவது நபரான அவர் இம்மாதம் முதல் தேதி தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் பல வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி கிருமித்தொற்று குழுமங்கள் தொடர்பிலானவை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மொத்தம் 79 புதிய சம்பவங்கள் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவை; 48 சம்பவங்கள் மற்ற கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவை.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இருவர் டான் டோக் செங் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள். 26 வயது சிங்கப்பூர் பெண்மணிகளான அவர்கள் அண்மையில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை.
ஹவ்காங் பலதுறை மருந்தகத்தில் நோயாளிகள் சேவை உதவியாளராகப் பணியாற்றும் 35 வயது சிங்கப்பூர் பெண்மணிக்கும் இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது செங்காங் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்.
எஞ்சிய 71 சம்பவங்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
இதுவரை மொத்தம் 492 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சைபெற்று வரும் 875 பேரில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இங்கு இதுவரை அறுவர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 734 பேர் கான்கோர்ட் இன்டர்நேஷன்ல் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, கிளனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் டி'ரிசார்ட் என்டியுசியில் உள்ள சமூக தனிமைப்படுத்தும் இடம் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்ட 1,604வது நபர் ischeamic இதய நோயால் உயிரிழந்தார் என்றும் கிருமித்தொற்றால் ஏற்பட்ட சிக்கல்களால் அல்ல என்றும் நேற்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் சிங்கப்பூரில் இதுவரை எழுவர் உயிரிழந்துள்ளனர்.
#சிங்கப்பூர் #கொவிட்-19

