சிங்கப்பூரில் அரையாண்டு பள்ளி விடுமுறை மே 5ஆம் தேதி தொடங்கும்

சிங்கப்பூரில் அரையாண்டு பள்ளி விடுமுறை மே 5ஆம் தேதி தொடங்கும்

2 mins read
9c9fe824-66c1-4517-b66f-adb6d4a5a2d6
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றை முறியடிப்பதற்கான திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ள வேளையில், அரையாண்டு பள்ளி விடுமுறை முன்னதாகக் கொண்டு வரப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றை முறியடிப்பதற்கான திட்டம் ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள வேளையில், அரையாண்டு பள்ளி விடுமுறை மே 5ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் அறிவித்துள்ளார்.

"ஜூன் 1ஆம் தேதிக்குள் நிலவரம் மேம்படும் என நாங்கள் நம்புகிறோம். அப்போது பள்ளிகள் திறக்கப்படுவதை நாம் எதிர்பார்க்கலாம்," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் இன்று (ஏப்ரல் 21) பதிவிட்டார்.

"அப்படியென்றால், மூன்றாவது கல்விப் பருவம் (Term 3) நீளமாக இருக்கும். எனவே, அந்தப் பருவத்தின் நடுப்பகுதியில் ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்படும். ஜூலை 20 முதல் 26ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும்.

"மூன்றாவது கல்விப் பருவம் 7 வாரங்கள், ஒரு வார விடுமுறை, 6 வாரங்கள் என வகைப்படுத்தப்படும். அந்த ஒரு வாரகால விடுமுறைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடங்களை மறுஆய்வு செய்வர் அல்லது திட்டமிடுவர்," என்று திரு ஓங் விவரித்தார்.

ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுவதால், பாடத்திட்டத்தில் கற்பித்தல் நேரம் குறையும் எனக் கூறிய அவர், தற்போதைய நிலவரப்படி வகுப்பறையில் பாடங்கள் கற்பிக்கப்படும் வேகத்தைவிட வீட்டிலிருந்து கற்கும் முறை மெதுவாக இருப்பதைச் சுட்டினார்.

"எனவே, கல்வியாண்டு இறுதியில் அனைத்துப் பள்ளிகளிலும் பொதுவாக சொல்லித் தரப்படும் குறிப்பிட்ட பாடங்கள் தேர்வில் சேர்க்கப்பட மாட்டா," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஏற்பாடு, பாடத்திட்டத்தின் சுமையைக் குறைக்க உதவுவதோடு ஆசிரியர்களும் மாணவர்களும் பாடத்திட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வேலைப் பளுவைக் குறைக்கும் என்றார் அவர்.

"குறிப்பிட்ட பாடங்கள் முடிந்தவரை கற்பிக்கப்படும். எனினும், தேசிய தேர்வுகளில் அந்தப் பாடங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்பட மாட்டா," என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
கல்விதேர்வு