சீனாவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்

சீனாவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்

1 mins read
7a8b755e-d145-4c38-bb4e-40c5df7b6e1b
கிருமித்தொற்றுடன் தொடர்புபடுத்தப்படும் மொத்த விற்பனைச் சந்தைக்குச் சென்றவர்கள் அல்லது அதற்கு அருகில் வசிப்பவர்கள், பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொள்ள இன்று (ஜூன் 15) வரிசையில் காத்திருந்தனர். படம்: இபிஏ -

சீனாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த வாரயிறுதியில் மட்டும் ஏறத்தாழ 100 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள புதிய இடமாக அங்குள்ள 'சின்ஃபாடி' மொத்த விற்பனைச் சந்தை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருமிப் பரவல் மோசமடையாமல் இருக்க சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் போராடி வருகின்றனர். வீடு வீடாகச் சென்று சின்ஃபாடி சந்தைக்குச் சென்றவர்களையும் அச்சந்தைக்குச் சென்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

சிசெங் எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு விளையாட்டரங்கு கொரோனா கிருமித்தொற்று பரிசோதனை செய்யும் இடமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரயிறுதியில் பலர் அங்கு வரிசையில் நின்று கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொண்டனர்.

இந்நிலையில், வேறொரு சந்தைக்கும் கிருமி பரவியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெய்ஜிங்கில் உள்ள 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு வட்டாரங்களில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் தொடங்க இருந்தன. ஆனால் கிருமித்தொற்று மீண்டும் தலைதூக்கியிருப்பதால் பள்ளிகள் திறக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடம் கற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

வீட்டிலிருந்து வேலை செய்யும்படி ஊழியர்களைச் சில நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

குடியிருப்புப் பேட்டைகளில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன.

"கிருமிப் பரவலுக்கான சாத்தியம் அதிகமாக இருக்கிறது. கிருமி மேலும் பரவாமல் இருக்க சரியான, உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்," என்று சீனத் துணைப் பிரதமர் சன் சுன்லான் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்