இரண்டாம் கட்ட தளர்விலும் வீட்டிலிருந்தே வேலை செய்ய வலியுறுத்து

இரண்டாம் கட்ட தளர்விலும் வீட்டிலிருந்தே வேலை செய்ய வலியுறுத்து

2 mins read
bc4c3e1d-63d9-4126-9045-7e8f0c14ce7a
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை காரணமாக நோய்ப் பரவலைத் தடுக்க முடியும் என்று அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முதல் தன் பொருளியலை மேலும் திறந்துவிடுகிறது. இருந்தாலும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் ஏற்பாடு தொடரும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை காரணமாக நோய்ப் பரவலைத் தடுக்க முடியும் என்று இன்று (ஜூன் 15) மெய்நிகர்வழி நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்.

பொருளியல் நடவடிக்கைகள் மேலும் திறந்துவிடப்பட்டாலும் வீட்டில் இருந்தவாறே வேலை செய்யும்படி ஊழியர்களை இன்னமும் தாங்கள் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.

மேலும் பல நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் சூழலில் அந்த நிறுவனங்களின் முதலாளிகள் தங்கள் ஊழியர்கள் வீடுகளில் இருந்து தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் வோங் வலியுறுத்திக் கூறினார்.

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கையாளும் அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவராக திரு வோங் இருக்கிறார்.

கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக மூடப்பட்ட பொருளியலைத் திறந்துவிடும் முதல் கட்டம் இப்போது மூன்றாவது வாரமாக நீடித்து வருகிறது. இருந்தாலும், பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு இன்னமும் அனுமதி தரப்படவில்லை.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட தளர்வு வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

சாப்பாட்டுக் கடைகளில் அமர்ந்து உணவு உண்பது உள்ளிட்ட பலவற்றுக்கும் இனி அனுமதி கிடைக்க இருக்கிறது.

ஊழியர்களைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதிப்பதுதான் நிறுவனங்களுக்கும் நல்லது என்பதை அமைச்சர் சுட்டினார். ஊழியர் ஒருவரைக் கிருமி தொற்றிவிட்டால் முழு அலுவலகத்தையுமே மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்றார் அமைச்சர்.

இரண்டாம் கட்டமாகப் பொருளியல் திறந்துவிடப்படும் நிலையில் நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திரு வோங் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்