'உணவு, உணவுப் பொட்டலம், கருவிகள் மூலம் கொரோனா கிருமி பரவுவதற்கு ஆதாரம் இல்லை'

'உணவு, உணவுப் பொட்டலம், கருவிகள் மூலம் கொரோனா கிருமி பரவுவதற்கு ஆதாரம் இல்லை'

2 mins read
c659043a-e315-4541-a524-6937a6ee6fa2
உலக அளவில் ஆய்வாளர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் ஆகியோரைப் பொறுத்த வரையில் உணவு, உணவுப் பொட்டலங்கள், சாதனங்கள் ஆகியவற்றின் வழியாக கொரோனா கிருமி மனிதர்களுக்குப் பரவுவதற்கான ஆதாரம் இல்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19க்கு காரணமான கொரோனா கிருமி உணவு, உணவுப் பொட்டலம் அல்லது சாதனங்கள் வழியாக பரவுவதற்கு ஆதாரம் ஏதும் தற்போது இல்லை என்று குறிப்பிட்ட சிங்கப்பூர் உணவு அமைப்பு, இதன் தொடர்பில் அணுக்கமாக கவனித்து வருவதாகக் கூறியுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள ஒரு சந்தையில் சால்மன் மீன் வெட்டும் கட்டையில் கொரோனா கிருமியின் பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் ஆய்வாளர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் ஆகியோரைப் பொறுத்த வரையில் உணவு, உணவுப் பொட்டலங்கள், சாதனங்கள் ஆகியவற்றின் வழியாக கொரோனா கிருமி மனிதர்களுக்குப் பரவுவதற்கான ஆதாரம் இல்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி நிலவரப்படி, இதே தகவலை உலக சுகாதார நிறுவனமும் (WHO) தெரிவித்திருந்தது.

"கொரோனா கிருமி உணவில் பெருக முடியாது. அது பெருகுவதற்கு மனித அல்லது விலங்கின் உடல் தேவை," என்று அதன் இணையப்பக்கத்தில் WHO தெரிவித்திருந்தது.

பெரும்பாலும் கொவிட்-19க்கு காரணமான கிருமி மனிதர்களுக்கிடையில், நேரடித் தொடர்பு மற்றும் சளி மற்றும் எச்சில் துளிகள் மூலமும் பரவுவதாக அது குறிப்பிட்டது.

இருப்பினும், கைகளை சோப்பு கொண்டு கழுவுதல், உடல் நலமில்லாவிட்டால் வீட்டிலேயே இருத்தல் போன்ற நல்ல தனிநபர் சுகாதாரம் பின்பற்றப்ப்பட வேண்டும் என்பதையும் சிங்கப்பூர் உணவு அமைப்பு வலியுறுத்தியது.

உணவு முறையாக சமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தல், உணவு மற்றும் பானங்களை மற்றவர்களுடன் பகிருந்து கொள்ளாமல் இருத்தல், நோய்வாய்ப்பட்டிருப்போர் உணவு தயாரிப்பில் ஈடுபடாமல் இருத்தல் போன்ற நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டியது அவசியம் என்றது சிங்கப்பூர் உணவு அமைப்பு.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்