'அணுவாயுதங்களைக் கொண்டிருக்கும் ஆசிய நாடுகள்; இந்தியாவைவிட சீனாவில் அதிகம்'

'அணுவாயுதங்களைக் கொண்டிருக்கும் ஆசிய நாடுகள்; இந்தியாவைவிட சீனாவில் அதிகம்'

2 mins read
4175af41-4a6c-4bfc-8ce3-700b57c0de00
நிலம், கடல் ஆகியவற்றின் அடிப்படையிலான ஏவுகணைகள், அணுவாயுதங்கள் தாங்கிய விமானங்கள் என தனது அணு ஆயுதங்களை சீனா நவீனப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவும் சீனாவும் தங்களது அணுவாயுதங்களை அதிகரித்திருப்பதாக ஸ்டாக்ஹோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம் (SIPRI) தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களது ஆயுதங்களை நவீனப்படுத்துவதாகவும் SIPRI தெரிவிக்கிறது.

கடந்த 2019ல் சுமார் 140 அணுவாயுதங்களைக் கொண்டிருந்த இந்தியா தற்போது 150 வரை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சீனா, தன்னுடைய அணுவாயுதங்களின் எண்ணிக்கையை சுமார் 290லிருந்து தற்போது 320ஆக அதிகரித்திருப்பதாக SIPRI நேற்று (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவைவிட அதிக எண்ணிக்கையிலான அணுவாயுதங்களை வைத்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நிலம், கடல் ஆகியவற்றின் அடிப்படையிலான ஏவுகணைகள், அணுவாயுதங்கள் தாங்கிய விமானங்கள் என தனது அணு ஆயுதங்களை சீனா நவீனப்படுத்தும் பணியில் இறங்கியுள்ள நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் பல்வேறு வகை, அளவிலான அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

கடந்த ஆறு வாரங்களாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே 3,488 கிலோமீட்டர் தூரத்துக்கு குறியிடப்படாத எல்லைப்பகுதி உள்ளது.

அனைத்துலக அளவில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 அணுஆயுத நாடுகள் உள்ளன. இவ்வாண்டு தொடக்க நிலவரப்படி, இந்த நாடுகளிடம் உள்ள மொத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13,400.

அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 13,865ஆக இருந்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது பழைய அணுவாயுதங்களை அழித்ததால் தற்போதைய எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. உலகில் உள்ள மொத்த அணுவாயுதங்களின் எண்ணிக்கையில் இவ்விரு நாடுகளும் 90 விழுக்காட்டைக் கொண்டுள்ளன.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்