சீன தலைநகர் பெய்ஜிங் மீண்டும் கிருமித்தொற்றின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், அங்குக் கிருமி பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பெய்ஜிங்கில் தற்போது பரவி வரும் கிருமித்தொற்றின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் ஜின்ஃபாடி இறைச்சி மற்றும் காய்கறி சந்தைக்கு மே 30ஆம் தேதியில் இருந்து இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் சென்று வந்திருக்கலாம் என்ற தகவல் பெய்ஜிங் நிர்வாகத்தை மேலும் கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இன்று (ஜூன் 17) உறுதி செய்யப்பட்ட 31 சம்பவங்கள் உட்பட சென்ற 11ஆம் தேதிக்குப் பிறகு பெய்ஜிங்கில் மொத்தம் 137 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் ஜின்பாடி சந்தைக்கு சென்று வந்தவர்கள்.
கடந்த ஒரு வாரமாக கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றின் முதல் அலை கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இந்த எச்சரிக்கை இரண்டாம் நிலையில் இருந்து மூன்றாம் நிலைக்குக் குறைக்கப்பட்டது.
இரண்டாம் நிலை எச்சரிக்கையின் படி, உள்நாட்டில் மக்கள் நடமாட்டம் பெரிதும் முடக்கப்படவில்லை. ஆனால் மக்கள் நகரத்தை விட்டுச் செல்வதோ அல்லது உள்ளேநுழைவதோ கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கிற்கான உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதோடு அக்கம்பக்க பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பெய்ஜிங்கிற்கு செல்லவிருந்த விமானங்களில் கிட்டத்தட்ட பாதியும் அங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்களில் சுமார் 40 விழுக்காட்டு விமானச் சேவைகளும் நேற்று ரத்து செய்யப்பட அல்லது செய்யப்படவிருந்ததாக விமானத் துறை நிறுவனமான வேரிஃபிளைட் தெரிவித்தது.
சில நீண்ட தூர பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெய்ஜிங்கின் 27 அக்கம்பக்க பகுதிகள் கிருமித்தொற்று பரவும் அபாயம் உள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கிருமித்தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் பெய்ஜிங் முழுவதும் பாலர் பள்ளிகள், தொடக்க, உயர்நிலை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் மூடப்பட்டு, இணைய வழி கற்பித்தல் தொடங்கப்பட வேண்டும் என்று கல்வித் துறை இன்று உத்தரவிட்டது. சில இடங்களில் உணவகங்கள், மதுபானக் கூடங்கள், இரவு விடுதிகளும் மூடப்பட்டன.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

