'மீண்டும் வெற்றிபெற சீன அதிபரின் உதவியை நாடினார் டிரம்ப்'

2 mins read
93d801ef-dfc6-44c1-8550-794d304edd1b
தேர்தலில் மீண்டும் வெற்றிபெற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் உதவி கேட்டதாக திரு டிரம்ப்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி -

தேர்தலில் மீண்டும் வெற்றிபெற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது.

நேற்று (ஜூன்ர் 17) நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் இத்தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. புத்தகத்தை எழுதியவர் திரு டிரம்ப்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன்.

உய்கர்கள் தொடர்பான மனித உரிமை கொள்கைச் சட்டத்தை அமல்படுத்துவதாக கையெழுத்திட்ட அதே நாளன்று அதிபர் டிரம்ப், உய்கர்கள் தடுப்பு முகாம் திட்டத்தைத் தொடங்குமாறு அதிபர் ஸியிடம் கேட்டுக்கொண்டதாக திரு போல்ட்டன் கூறியுள்ளார்.

இவ்வாறு சொல் ஒன்று, செயல் ஒன்றாக இருப்பதாக திரு டிரம்ப்பின் செயல்பாடுகளைக் குறித்தும் சீனா தொடர்பான திரு டிரம்ப்பின் வெளிநாட்டுக் கொள்கைகளைக் குறித்தும் திரு போல்ட்டன் தம் புத்தகத்தில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

"வர்த்தக ரீதியாக டிரம்ப் தம் சொந்த விவகாரத்தையும் நாட்டு நலனைக் கலந்ததுடன் தேசிய பாதுகாப்பையும் அதில் ஈடுபடுத்தியுள்ளார்," என்று திரு போல்ட்டன் எழுதியிருந்தார்.

இதற்கிடையே தம் முன்னாள் உயர் அதிகாரி கூறும் சம்பவங்களைப் பொய்கள் என்றும் கட்டுக்கதைகள் என்றும் அதிபர் டிரம்ப் டுவிட் செய்திருந்தார்.

சீனாவிடம் தாம் கடுமையாக உள்ளதாக திரு டிரம்ப் கூறி வருகிறார். இதனை திரு போல்ட்டனின் குற்றச்சாட்டுகள் வலுவிழக்கச் செய்தாலும் அதிபர் டிரம்ப்பை ஒரு சந்தர்ப்பவாதியைப் போல் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

"தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிசெய்வதுடன் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகளை மீட்டுக்கொண்டும் வலுவிழக்கச் செய்யும் உள்ளார் டிரம்ப்," என்று தொழில்நுட்பம் மற்றும் நாட்டுப் பாதுகாப்பு வல்லுநர் மார்டிஜின் ரசெர் கூறினார்.

சீனாவுக்கு எதிராகக் கடுமையாக இருப்பதை திரு டிரம்ப் தம் தேர்தல் உத்தியாக எடுத்துக்கொண்டுள்ளார். சீனாவுடன் ஜனநாயக எதிராளி ஜோ பைடன் நெருக்கமாக இருப்பதாகவும் திரு டிரம்ப் காட்ட முயல்கிறார்.

நவம்பர் மாதத் தேர்தலுக்காக சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பாக திரு டிரம்ப் மாறியுள்ளதைச் சுட்டிய திரு போல்ட்டன், இந்த போக்கு தேர்தலுக்கு பிறகும் நீடிக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து அமெரிக்கத் தேர்தல்களில் தலையிடும் எண்ணம் இல்லை என்று சீனா கூறியது. போல்ட்டனின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்டபோது சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இவ்வாறு கூறினார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்