மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டதால் 1,210 பேருக்கும் அதிக மக்கள் தற்காலிக நிவாரண இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
பொந்தியான், பத்து பகாட், மூவார், குலுவாங், தங்காக் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த மாநிலத்தின் சுகாதார சுற்றுப்புறக் குழுத் தலைவர் ஆர். வித்தியானந்தன் தெரிவித்தார்.
ஐந்து மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்றும் 288 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,210 பேர் 18 இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த மூவாரில் மாநில அரசாங்கம் பரிசோதனைகளை நடத்தி இருக்கிறது என்று ஜோகூர் மாதர் மேம்பாடு, குடும்ப மற்றும் சமூகக் குழுத் தலைவர் ஸாய்டோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அப்புறப்படுத்தும் போதும் அவர்களுக்கான தற்காலிக கூடங்களை அமைத்தபோதும் கொவிட்-19 நிபந்தனைகள் எல்லாம் முறையாகப் பின்பற்றப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை ஊழியர்கள் கொவிட்-19 பரிசோதனைகளை நடத்தியதாக சுங்கை பலாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஸாய்டோன் இஸ்மாயில் கூறினார்.
சில இடங்களில் வெள்ளம் வடிந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் இன்னமும் வீடு திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்று நேற்று அவர் குறிப்பிட்டார். நல்வாழ்வுத் துறை மூலம் மாநில அரசு மக்களுக்கு உதவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

