அல்ஜுனிட் குழுத்தொகுதியின் பாட்டாளிக் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

அல்ஜுனிட் குழுத்தொகுதியின் பாட்டாளிக் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

2 mins read
833935a6-2e49-4547-b5f2-45d2950df98a
இன்று அறிமுகம் செய்யப்பட்ட (இடது மேல்புறத்திலிருந்து கடிகார சுழற்சி முறைப்படி) திரு டெனிஸ் டான் லிப் ஃபோங், திருவாட்டி ரயீசா பேகம் ஃபரிட் கான், திரு ரோன் டான் ஜுன் யென், திரு ஜேமஸ் லிம், திரு டைலன் இங் ஃபூ எங். படங்கள்: பாட்டாளிக் கட்சி -

சிங்கப்பூரில் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிடும் தங்களது கட்சி வேட்பாளர்களை பாட்டாளிக் கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் தலைமைச் செயலாளார் பிரித்தம் சிங், கட்சித் தலைவர் சில்வியா லிம், திரு ஃபைசால் மனாப் ஆகியோர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளிலேயெ இப்போதும் போட்டியிடுவர். 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு ஜெரால்டு கியாம், 2015ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான திரு லியோன் பெரேரா ஆகிய இருவரும் கட்சியின் முன்னாள் தலைவர் லோ தியா கியாங், கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான திரு சென் ஷோ மாவ் ஆகியோருக்குப் பதிலாகப் போட்டியிடுவர் என்று திரு பிரித்தம் சிங் இன்று தெரிவித்தார்.

வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள மேலும் ஐந்து வேட்பாளர்களை, இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் அக்கட்சி அறிமுகம் செய்தது.

பொருளியலாளர் ஜேமஸ் லிம், 44, சமூக ஆர்வலர் ரயீசா பேகம் ஃபரிட் கான், 26 ஆகிய இருவரும் முதன் முதலாக தேர்தல் களம் காண இருக்கின்றனர். திருவாட்டி ரயீசாதான் கட்சியின் ஆக இளைய வேட்பாளர்; அவர் முன்னாள் அதிபர் தேர்தல் ஆர்வலர் திரு ஃபரிட் கானின் மகள்.

மற்ற வேட்பாளர்கள் முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டவர்கள்.

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் டான், 48, ஹவ்காங் தனித்தொகுதியில் பாட்டாளிக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

நிதித் துறையில் பணியாற்றும் திரு டைலன் இங், 45, சுகாதாரப் பராமரிப்புக் கழகம் ஒன்றின் ஆய்வு அலுவலகத்தில் பணிபுரியும் திரு ரோன் டான், 34, ஆகிய இருவரும் மற்ற இரு வேட்பாளர்கள்.

நான்கு வேட்பாளர்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த வார இறுதியில் பாட்டாளிக் கட்சியின் தேர்தல் அறிக்கையுடன் மற்ற வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவர் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்