1984ஆம் ஆண்டு தாம் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டபோது, ஃபுல்லர்ட்டன் ஸ்குவேரில் நடைபெற்ற மக்கள் செயல் கட்சியின் மதிய நேர பிரசாரக் கூட்டத்தில், தாம் உரையாற்றியதைக் காட்டும் படத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ள பிரதமர் லீ, சிங்கப்பூர் புதிய, முற்றிலும் மாறுபட்ட சவால்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரிலும் உலக அளவிலும் கொவிட்-19இன் தாக்கம் நீண்ட காலத்துக்கு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், நாடு சுதந்திரமடைந்த பிறகான முக்கியமான தேர்தல் இது என்று தற்போதைய தேர்தலைக் குறிப்பிட்டுள்ளார்.
கடினமான முடிவுகளை எடுப்பதற்கு, சிங்கப்பூரை இந்த நெருக்கடியான காலத்திலும் அதற்குப் பின்னும் பாதுகாப்பாக வழிநடத்திச் செல்வதற்கு சிங்கப்பூரின் அடுத்த அரசாங்கத்துக்கு மக்களின் வலுவான ஆதரவு தேவை என்று தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் ஃபுல்லர்ட்டனில் மதிய நேர பிரசாரம் நடைபெறும் என்று குறிப்பிட்ட திரு லீ, அதுதான் தேர்தல் பிரசாரத்தின் சிறப்பு என்றார்.
அதேபோல இந்த ஆண்டும் ஃபுல்லர்ட்டனில் பிரசார உரை நடத்த இருப்பதாகக் குறிப்பிட்ட திரு லீ, அது இணையம் வழியானதாக இருக்கும் என்றார்.
நாளை (ஜூலை 6) நண்பகல் வேளையில், பிரசார உரை நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார் பிரதமர் லீ. அதில், சவால்களை மக்கள் செயல் கட்சி எவ்வாறு எதிர்கொள்ள இருக்கிறது என்பதைப் பற்றி உரையாற்றப்போவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.