பெய்ரூட்: சக்திவாய்ந்த வெடிப்பில் 100 பேர் பலி, நாலாயிரத்துக்கு மேற்பட்டோர் காயம்; பலி எண்ணிக்கை உயருமென அச்சம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக சேமிப்புக் கிடங்கில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்ததாகவும் 4,000க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பயங்கர சத்தத்துடன் பெய்ரூட் நகரையே உருக்குலைய செய்த இந்த வெடி விபத்து, துறைமுகப் பகுதியில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த, உரம், வெடிகுண்டு போன்றவற்றில் பயன்படுத்தப்படக்கூடிய அம்மோனியம் நைட்ரேட் எனும் ரசாயனப் பொருளால் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 2,750 டன் அளவில் அந்த ரசாயனம், தகுந்த பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி (சிங்கப்பூர் நேரம் இரவு 11 மணி) வாக்கில் நிகழ்ந்த வெடிப்புக்குப் பிறகு, சில மணி நேரத்துக்கு துறைமுகப் பகுதியே ஆரஞ்சு வண்ணப் புகையால் சூழப்பட்டது என்று கூறப்பட்டது.

துறைமுகத்தில் இருந்த கட்டடங்கள் மண்ணும் கல்லுமாக முற்றிலும் சிதைந்துபோயிருந்ததைக் காட்டும் படங்கள் வெளியாகின.

சுமார் ஆறு மில்லியன் மக்கள்தொகை கொண்ட அந்த நாடு, உணவுப்பொருள் இறக்குமதிக்கு இந்தத் துறைமுகத்தையே பெரிதும் சார்ந்துள்ளது.

லட்சக் கணக்கான சிரியா அகதிகளும் அங்கு தஞ்சம் புகுந்துள்ள நிலையில், கொரோனா கிருமிப் பரவலும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

வெடிப்பு நிகழ்ந்தபோது பல கிலோமீட்டர் தூரத்தில்கூட பெரும் சத்தம் கேட்டதாகவும், அதிர்வுகள் காரணமாக கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதாகவும் கூறப்பட்டது.

பெய்ரூட்டிலிருந்து 180 கி.மீ. தொலைவில் இருக்கும் சைப்ரசில் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் நொகோசியாவில் உள்ள ஒரு வீட்டில் சன்னல் கண்ணாடி உடைந்து சிதறியதாகவும் கூறப்பட்டது.

இந்த வெடிப்பு நிகழ்வானது 1975-90 காலகட்டத்தில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர், அதற்குப் பிரகான சூழலை நினைவுபடுத்துவதாக மக்கள் தெரிவித்தனர்.

அந்நாட்டுப் பிரதமர் மிஷல் அவுன் இன்று அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார். வெடிப்புச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றி அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

அந்த சேமிப்புக் கிடங்கில் இருந்த துளையை அடைக்க வெல்டிங் பணி செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகத் தகவல் ஒன்று குறிப்பிட்டது.

சம்பவத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என அந்நாட்டுப் பிரதமர் ஹசன் டியாப் குறிப்பிட்டார். 

பலர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படும் வேளையில், இடிபாடுகளுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon