சிங்கப்பூர் திரும்பும் மலேசிய ஊழியர்கள்; நிம்மதி பெருமூச்சுவிடும் உள்ளூர் நிறுவனங்கள்

சிங்கப்பூர் திரும்பும் மலேசிய ஊழியர்கள்; நிம்மதி பெருமூச்சுவிடும் உள்ளூர் நிறுவனங்கள்

2 mins read
6c0ead36-c50a-400c-93a3-3fe413c1d48c
மலேசியாவிலிருந்து கடந்த 17ஆம் தேதி சிங்கப்பூருக்குத் திரும்பிய ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான மலேசியர்கள் கடந்த திங்கட்கிழமையிலிருந்து சிங்கப்பூர் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்களில் தொழிற்சாலை ஊழியர்கள், விற்பனை அதிகாரிகள், மின்சாரத் தொழில்நுட்பர், சாயம் பூசுபவர்கள், தச்சர்கள் ஆகியோர் அடங்குவர்.

வேலை செய்ய இவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு வந்திருப்பது உள்ளூர் வர்த்தகங்களுக்கு நிவாரணத்தைத் தந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியன்று இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டபோது முக்கிய ஊழியர்களை இழந்து பல உள்ளூர் நிறுவனங்கள் தவித்தன.

எல்லை மூடப்பட்டதை அடுத்து சிங்கப்பூரின் புதுப்பிப்புப் பணி நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. அவற்றின் ஊழியர்களில் 80 விழுக்காட்டினர் மலேசியர்கள்.

சில புதுப்பிப்புப் பணி நிறுவனங்கள் நிரந்தரமாக மூடிவிட்டன என்று சிங்கப்பூர் புதுப்பிப்புப் பணி ஒப்பந்ததாரர்கள், பொருள் விநியோகச் சங்கத்தின் தலைவர் திரு ஸ்காய் டான் தெரிவித்தார்.

புதுப்பிப்புப் பணி நிறுவனங்களில் வேலை செய்யும் பெரும்பாலான மலேசியர்கள் அன்றாடம் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணம் செய்பவர்கள்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் அவ்வப்போது பயணம் செய்யும் ஏற்பாட்டின்கீழ் ஏறத்தாழ 20 ஊழியர்களை சிங்கப்பூருக்குக் கொண்டு வந்திருப்பதாக திரு கோ தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் தற்போது ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாக அவர் கூறினார்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே சிலர் மட்டும் பயணம் செய்யும் வகையில் அவ்வப்போது பயணம் செய்யும் ஏற்பாடு, இருவழி தடையற்ற பயணம் ஆகிய திட்டங்கள் கடந்த திங்கட்கிழமை தொடங்கின.

கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிக்கு முன்பு வேலை நிமித்தமாக நாள்தோறும் 100,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிங்கப்பூருக்கு வந்து சென்றனர்.

குறிப்புச் சொற்கள்