சிங்கப்பூருடனான எல்லையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மலேசியா துரிதப்படுத்த வேண்டும் என ஜோகூர் மாநில முதல்வர் ஹஸ்னி முகம்மது வலியுறுத்தி உள்ளார்.
அண்மையில் பிரதமர் முகைதீன் யாசினைச் சந்தித்து இவ்விவகாரம் குறித்துப் பேசியதாகவும் இது குறித்து ஆராயும்படி மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரியை பிரதமர் கேட்டுக்கொண்டதாகவும் திரு ஹஸ்னி கூறியிருக்கிறார்.
எல்லையை விரைந்து திறக்கும் வகையில் இரு நாட்டு அரசாங்கங்களும் இப்போது சாதகமான வழிகளைக் கண்டறிந்து வருவதாக அவர் சொன்னார்.
கொவிட்-19 நெருக்கடியால் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த 35,000க்கும் மேற்பட்ட ஜோகூர்வாசிகள் வேலையிழந்து விட்டதாகவும் முதல்வர் ஹஸ்னி குறிப்பிட்டார்.
"சிங்கப்பூர் பொருளியலைச் சார்ந்தே ஜோகூரின் பொருளியல் இருக்கும் நிலையில், எல்லை வழியாக அன்றாடம் சிங்கப்பூருக்குச் சென்று வரும் 250,000க்கும் மேற்பட்ட மலேசியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்றார் அவர்.
அத்துடன், நாட்டின் சுங்க வருவாயில் 50% பங்களிப்பைக் கொண்டுள்ளதாலும் எல்லையைத் திறக்க வேண்டியது அவசியம் என்று திரு ஹஸ்னி சுட்டினார்.
எல்லைத் திறப்பு குறித்த நற்செய்தியை மலேசிய அரசு விரைவில் அறிவிக்கும் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.
இப்போதைக்கு, அத்தியாவசியமான வர்த்தக, அதிகாரபூர்வ நோக்கங்களுக்காக மலேசியா- சிங்கப்பூர் இடையே பயணம் செய்ய இருதரப்பு பயண ஏற்பாட்டுத் திட்டங்கள் அனுமதிக்கின்றன.


