நேற்று மனைவியின் பிறந்தநாள்.
கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமானதிலிருந்து மனைவியின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தவர் கார்த்திகேசு செல்லதுரை. ஆனால் இவ்வாண்டு அவ்வாறு செய்யமுடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு. வரும் 19ஆம் தேதி அவரது திருமண நாள். அதையும் காணொளி மூலமே கொண்டாட முடியும். மூன்று மகள்களுக்கு தந்தையான கார்த்திகேசு, தமது 71 வயது அப்பா செல்லதுரை, மனைவி, மகள்களை விட்டுவிட்டு சிங்கப்பூரில் வசிப்பதில் ஏக்கம் இருந்தாலும், "அடுப்பில் பூனை தூங்கக்கூடாது இல்லையா," என்றார்.
மலேசியரான அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி. பொதுப்போக்குவரத்து நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றியுள்ள அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 'கிராப்' பகிர்வு வாகனம் ஓட்டி வருகிறார்.
மார்ச் மாதம் 18ஆம் தேதி மலேசியாவில் சிக்கிய அவர், மே மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூர் வந்தார். தற்போது நண்பர்களோடு சேர்ந்து வாடகைக்கு ஒரு வீட்டில் தங்கியுள்ள அவர், இதுவரை மலேசிய ஊழியர்கள் ஏழு பேருக்கு வீட்டு வசதிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
"என்னால் முடிந்த வரையில் தெரிந்தவர்களிடம் அணுகி தங்குமிட வசதி ஏற்படுத்தி கொடுத்தேன். இந்த சிரம காலத்தில், சமூகத்திற்கு என்னால் ஆற்ற முடிந்த சிறிய பங்கு இது," என்றார் அவர்.
முன்பு தினமும் அதிகாலை நான்கு மணிக்கு ஜோகூரிலிருந்து கிளம்பி வந்து வேலை செய்துவிட்டு மாலை ஆறு மணிக்கு சிங்கப்பூரிலிருந்து வீடு திரும்புவார் கார்த்திகேசு. நீண்ட காலப் போக்கில் இப்படி தினமும் போய் வருவது சாத்தியம் இல்லை என்று நினைக்கும் அவர், குடும்பத்தினரைக் காண மிகவும் ஏங்குவதாகக் கூறினார்.

