பிலிப்பீன்சில் பசிக் கொடுமையால் வாடும் 7.6 மில்லியன் குடும்பங்கள்

1 mins read
c2f66fd7-d946-4df0-916a-0bbcb8d3ae04
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பிலிப்பீன்சில் போதிய அளவு உணவு கிடைக்காததால், கடந்த காலாண்டில் 30.7%, அதாவது, 7.6 மில்லியன் குடும்பங்கள் பசிக் கொடுமையால் வாடியதாகத் தெரியவந்துள்ளது.

கொவிட்-19 சூழல் காரணமாக தொடர்ந்து 7 மாதங்களுக்கு மேல் பலர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதால் ஆயிரக்கணக்கான வர்த்தகங்கள் நசிவுற்றன; பல லட்சக் கணக்கானவர்கள் வேலை இழந்தனர்.

இம்மாதம் 17 முதல் 20ஆம் தேதி வரை 1,249 பேரிடம் நடத்தப்பட்ட 'எஸ்டபல்யூஎஸ்' ஆய்வில், கடந்த மூன்று மாதங்களில் ஒரு முறையாவது பசியுடன் இருந்ததாக, ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒருவர் தெரிவித்தனர்.

கடந்த மூன்று மாதங்களில், 'அடிக்கடி' அல்லது 'எப்போதும்' பசியுடன் இருந்ததாக 8.7 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட இத்தகைய ஆய்வில் 20.9 விழுக்காட்டினர் அதாவது 5.2 மில்லியன் குடும்பங்கள் பசியால் வாடியதாகத் தெரிவிக்கப்பட்டது; கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 23.8 விழுக்காட்டினர் பசியால் வாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்க உதவிகள் அறிவிக்கப்பட்டாலும் அனைவருக்கும் அந்த உதவிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்