வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ரோல்ஸ்-ராய்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள் மூன்று வார வேலை நிறுத்தத்தைத் தொடங்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த தொழிற்சாலையின் செயல்பாடுகளை நிறுவனம் சிங்கப்பூருக்கு மாற்றக்கூடும் என்பதால் இந்த வேலை நிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
லங்காஷைரின் பர்னால்ட்ஸ்விக் நகரில் அமைந்துள்ள அந்த தொழிற்சாலையில் வரும் 27ஆம் தேதி வரை இந்த வேலை நிறுத்தம் திட்டமிடப்பட்டிருப்பதாக யுனைட் தொழிற்சங்கம் தெரிவித்தது.
இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கடினமாகப் பாடுபட்டு வருகிறோம் என நிறுவனத்தின் பேச்சாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அந்த வளாகத்தில் 550 பேர் பணிபுரிகின்றனர். ஆனால், பிளேட் தயாரிக்கும் நடவடிக்கைகளை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஆசியாவுக்கு மாற்றினால் சுமார் 350 பேர் வேலை இழக்கக்கூடும்.
கொவிட்-19 கொள்ளைநோய் சூழல் காரணமாக அந்த நிறுவனக் குழுமத்தின் நிதிநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மே மாதத்தில் அனைத்துலக அளவிலான தங்களது வர்த்தக அமைப்பை மறுசீரமைத்தது அந்த நிறுவனம். அதன் ஓர் அங்கமாக, பர்னால்ட்ஸ்விக்கில் இருக்கும் 'பிளேட்ஸ்' பிரிவை ஆசியாவுக்கு மாற்ற திட்டமிடப்பட்டது.
பிரிட்டனின் பெரிய தொழிற்சங்கமான யுனைட், இந்தத் திட்டத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், வேலை நிறுத்தத்தைத் தற்காத்துப் பேசியது.
டிரென்ட் ஜெட் எஞ்சின் பிளேட் தயாரிப்பை சிங்கப்பூருக்கு மாற்ற நிறுவனம் திட்டமிடுவதாகக் குறிப்பிட்ட தொழிற்சங்கம், பர்னால்ட்ஸ்விக்கின் முக்கிய தொழிற்சாலையான ரோல்ஸ்-ராய்சின் இந்த முடிவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றது.
பர்னால்ட்ஸ்விக்கில் தொழிற்சாலை தொடர்ந்து இயங்கும் என உறுதியளித்த ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம், எத்தனை பேர் வேலையிழப்பர் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றது.
கடந்த மே மாதத்தில் இந்த நிறுவனம் அறிவித்த மறுசீரமைப்புத் திட்டத்தின்படி 9,000 ஆட்குறைப்பு இருக்கும் என்றும் அதில் பாதிக்கு மேல் இந்த ஆண்டில் நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

