இந்தோனீசியாவில் அண்மைய வாரங்களாக நடத்தப்பட்ட வேட்டையில் பிடிபட்ட 23 பயங்கரவாத சந்தேக நபர்கள் நேற்று தலைநகர் ஜகார்த்தாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தலைநகர் அருகே உள்ள தடுப்புக்காவல் மையத்தில் இவர்கள் அனைவரும் அடைக்கப்படுவர். அல்-காய்தா கட்டமைப்புடன் தொடர் புடைய இவர்களிடம் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும். இவர்களில் ஜெமா இஸ்லாமியா அமைப்பின் மூத்த தலைவர் ஸுல்கர்நயேன், 57, என்பவரும் ஒருவர்.
2002ஆம் ஆண்டு பாலி தீவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இவர், இந்தோனீசியாவுக்குள் 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த வாரம் சுமத்ராவில் பயங்கரவாத முறியடிப்புப் பிரிவினரிடம் பிடிபட்டார். இந்த தாக்குதலில் 202 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள்.
தாக்குதலுக்குப் பயன்படுத்துவதற்கான வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஏரிஸ் சுமர்சோனோ என்றும் அழைக்கப்படும் ஸுல்கர்நயேன் உதவியதாக இந்தோனீசிய தேசிய போலிஸ் பேச்சாளர் அகமது ரமதான் செய்தியாளர்களிடம் கூறினார். ஆஃப்கானிஸ்தானில் உள்ள ராணுவப் பயிற்சிக்கழகத்தில் ஏழாண்டு காலம் பயிற்றுவிப்பாளராக ஸுல்கர்நயேன் வேலை செய்ததாகவும் அவர் கூறினார்.

