கொவிட்-19 பெருந்தொற்று ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் 81 மில்லியன் வேலைகளை முடக்கி விட்டதாக ஐஎல்ஓ எனப்படும் அனைத்துலக தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, பெண்களும் இளையர்களும் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
"ஆசிய-பசிபிக் வட்டார ஊழியர் சந்தையில் கொவிட்-19 தொற்றுப் பரவல் தாங்க இயலாத தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. பாதிக்கப்பட்ட, குறைந்த சமூகப் பாதுகாப்பு முறையைக் கொண்ட நாடுகள் பலவும் நிறுவனங்கள் மீண் டெழவும் ஊழியர்கள் மறுபடி வேலைக்குச் செல்லும் நிலையை ஏற்படுத்தவும் உதவுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன," என்று அறிக்கை கூறியது. கிருமி தொற்றுவதற்கு முந்திய நிலைையக் காட்டிலும் ஆசிய-பசிபிக் வேலை நிலவரத்தில் 4.2% வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் ஒட்டுமொத்தமாக வேலை இழந்தோரில் 4.6% பெண்கள் மற்றும் 4% ஆண்கள் என்றும் ஐஎல்ஓ அறிக்கை குறிப்பிட்டது.
"இவர்களில் இளைய வயதுடையோரின் வேலைகள் பறிபோயின. அவர்களில் சிலர் குறைந்த நேரங்களில் வேலை செய்யும் நிலை ஏற்பட்டது," என்றது அந்த ஐநா அமைப்பு.
வேலைகளை இழந்தோரின் மொத்த எண்ணிக்கையில் இளையரின் விகிதம் மூன்று மடங்கு முதல் 18 மடங்கு வரை இருந்ததாக அது தெரிவித்தது.
"ஆசிய-பசிபிக் வட்டார வேலைகளில் முக்கிய பங்கு வகிக்கும் தெற்காசியாவில் கிருமித்தொற்றுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் கிட்டத்தட்ட 50 மில்லியன் வேலைகள் குறைந்துவிட்டன. கிழக்காசியாவில் 16 மில்லியன், தென்கிழக்கு ஆசியாவில் 14 மில்லியன், பசிபிக் தீவுகளில் அரை மில்லியன் வேலைகள் மாயமாய் மறைந்துவிட்டது. இதன் காரண மாக கணக்கிலடங்கா ஊழியர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வட்டாரத்தின் பொருளியல், நிறுவனங்கள் ஆகியவற்றோடு ஊழியர்களும் நெருக்கடியிலிருந்து மீள போராடி வருகின்றனர்," என்று ஐஎல்ஓ கூறியது.

