இந்தோனீசிய மக்கள் அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி மருந்து இலவசம் என அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ அறிவித்துள்ளார். முன்மாதிரியாகத் திகழும் வகையில் முதன்முதலாக தாம் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளப் போவதாகவும் நேற்று அவர் தெரிவித்தார்.
"முதல் தடுப்பூசி மருந்து எனக்குத்தான் என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தி அவர்களிடத்தில் நம்பிக்கையை வளர்க்க எனது இச்செயல் உதவும்," என்று நேற்று அதிபர் மன்றத்திலிருந்து திரு ஜோக்கோவி ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். அந்த உரை யூடியூப் வழியாக நேரலையாக காண்பிக்கப்பட்டது.
ஏராளமான யோசனைகளையும் நாட்டின் நிதி நிலவரத்தையும் ஆராய்ந்த பின்னர் எல்லா இந்தோனீசியர்களுக்கும் தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்க தாம் முடிவெடுத்ததாக அப்போது அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்தோனீசிய சுகா தார அமைச்சு இணையம் வழியாக நடத்திய ஆய்வில் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோரில் மூன்றில் ஒருவரே அதற்கான கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிய வந்தது.
இதற்கிடையே, முதியோரைக் காட்டிலும் இளம் வயது ஊழியர்களுக்கே தடுப்பூசி முதலில் போடும் திட்டம் உள்ளதாக இந்தோனீசியா தெரிவித்து உள்ளது.
உலக நாடுகள் பலவும் கிருமித்தொற்றால் எளிதில் பாதிக்கப்படும் முதிய வயதினருக்கு தடுப்பூசி போட முயன்றுவரும் வேளையில் இந்தோனீசியா இவ்வாறு ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளதாக புளூம்பெர்க் இணையச் செய்தி குறிப்பிட்டது.
கொவிட்-19 தடுப்பூசி மருந்தை 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு போடுவதில் கவனம் செலுத்த இருக்கும் இந்தோனீசியா, சுகாதார ஊழியர்கள், காவல்துறை மற்றும் ராணுவத்தினர் போன்றோருக்கு தொடக்கத்தில் தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றால் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் தடுப்பூசி மருந்தை முதலில் எந்தப் பிரிவினருக்குச் செலுத்துவது என்னும் கேள்விக்கு விடைகாண்பதில் பல நாடுகள் முயன்று வருகின்றன.
இருப்பினும் கடந்த வாரம் பிரிட்டனிலும் இந்த வாரம் அமெரிக்காவிலும் முதிய வயதினருக்கு முதல் தடுப்பூசி போட்டு சோதிக்கப்பட்டது.

