மலேசியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பொழிந்து வரும் நிலையில், ஜாலான் பத்து பகட் - மெர்சிங் சாலையில் குளுவாங்குக்கு அருகில் மைல் 18 எனும் இடத்தில் காரோடு ஆடவர் ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் வெள்ளத்தில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்ததாகவும் காரை ஓட்டிச் சென்ற முகமது ராஜிஹன் ஜுனைடி, 28, எனும் ஆடவர் வெள்ளம் பெருகி ஓடிய அந்தச் சாலையில் தம் மனைவி கைருன்னிசா இப்ராகிம், 25, உடன் சென்றுகொண்டிருந்தார்.
காரை வெள்ளம் இழுக்க ஆரம்பித்ததும் காரின் கண்ணாடியை உடைத்து தம் மனைவியை காரிலிருந்து வெளியேற்றினார். சுற்றியிருந்த பொதுமக்கள் கைருன்னிசாவைக் காப்பாற்றினர்.
ஆனால், வெள்ளம் அதிகரித்ததால் ஜுனைடியுடன் கார் அடித்துச் செல்லப்பட்டது.
நேற்றிரவு 10.35 மணியளவில் கைருன்னிசா காஹாங் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து தம் கணவரைக் கண்டுபிடித்துத் தரக் கோரினார்.
புகார் கிடைத்த சற்று நேரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். மோசமான காலநிலையும் இருட்டும் தேடி மீட்கும் பணியை மேலும் சிரமமாக்கின.
வெள்ளம், நிலச்சரிவு பிரச்சினைகளால் பாஹாங்கின் பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

