'விநியோகத் தொடரை நிலையாக வைத்திருக்க சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து பணியாற்றும்'

'விநியோகத் தொடரை நிலையாக வைத்திருக்க சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து பணியாற்றும்'

2 mins read
e10d48ee-8be9-44d1-b53f-7ce9de5090cb
'டூபோண்ட் சிங்கப்பூர்' ரசாயன நிறுவனத்தைப் பார்வையிடும் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசியாவில் கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் தற்போதைய சூழலில் விநியோகத் தொடர் வழக்கம்போல இயங்குவதை உறுதி செய்ய சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

'டூபோண்ட் சிங்கப்பூர்' ரசாயன நிறுவனத்திற்கு இன்று வருகையளித்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். மலேசியாவில் அண்மைய நிலவரத்தால் சிங்கப்பூரின் விநியோகத் தொடருக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "அண்மைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும் அவசரநிலையும் குறித்து எங்களது மலேசிய சகாக்களுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளோம்.

"எனது சகாக்களுடன் நான் உரையாடினேன். இரு நாடுகளும் பலனடைய விநியோகத் தொடர் வழக்கம்போல இயங்குவதை உறுதி செய்ய எங்களது கடப்பாட்டை நாங்கள் வெளிப்படுத்தினோம்," என்று விவரித்தார்.

கடந்த சில நாட்களாக மலேசியா உடனான சிங்கப்பூரின் விநியோகத் தொடர் வழக்கம்போல இயங்கி வந்துள்ளதாக திரு சான் தெரிவித்தார்.

கொவிட்-19 நோய்ப் பரவல் சூழல் தொடக்கத்தில் இருந்தே விநியோகத் தொடருக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதைக் கவனித்தில் கொண்டு சிங்கப்பூர் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருவதாக அவர் சொன்னார். உள்ளூர் தயாரிப்புகளை அதிகப்படுத்துவது, விநியோகத் தொடரைப் பல்வகைப்படுத்துவது போன்றவற்றை சிங்கப்பூர் மேற்கொண்டு வருகிறது.

கொவிட்-19 சூழல், ஏற்றுமதிகளுக்குக் கட்டுப்பாடு, பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் விநியோகத் தொடருக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்றார் அவர்.

"எனவே விநியோகத் தொடர் நிலைப்படுத்தப்பட்டு உள்ளது என்று எண்ணி நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.

"உண்மையைச் சொல்லப் போனால், உலகத்தின் பல பகுதிகளில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து இருக்கும் தற்போதைய சூழலில் மலேசியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் விநியோகத் தொடருக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதை நாம் கருத்தில்கொண்டு அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

"உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களைப் பொறுத்தமட்டில், அன்றாட அடிப்படையில் நமது விநியோகத் தொடரின் மீள்திறனை நாங்கள் தொடர்ந்து மறுஆய்வு செய்து வருகிறோம்.

"நாம் நிதானமாக இருந்து நிலவரத்திற்குத் தகுந்தாற்போல செயல்பட்டு உணவு, அத்தியாவசிய பொருள் விநியோகத்தைப் போதுமானதாக வைத்திருக்க முடியும்," என்று அமைச்சர் சான் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்