(காணொளி) தீவிர சிகிச்சைப் பிரிவு கொவிட்-19 நோயாளிகள் மரணம்; ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக பரபரப்பு

கொவிட்-19 பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் காற்று கிடைக்காததால் நால்வர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

அந்த மருத்துவமனையில் சம்பவ நேரத்தில் ஆக்சிஜன் போதிய அளவுக்கு இருப்பு இல்லை என்று கூறப்பட்டது. ஜனவரி 2ஆம் தேதி எகிப்தில் உள்ள  எல் ஹுசைனியா சென்ட்ரல் மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தம் உறவினர் ஒருவர் ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழந்ததைக் கண்ட அகமது நஃபே எனும் ஆடவர், உடனே தம் கைபேசியில் மருத்துவமனைச் சூழலைப் படம்பிடித்தார்.

அங்கு கண்காணிப்புச் சாதனங்கள் ஒலி எழுப்புவதையும் தாதியர் மன உளைச்சலுடன் காணப்படுவதையும் காணொளி காட்டியது. ஆடவர் ஒருவருக்கு செயற்கை சுவாசம் அளித்து இதயச் செயல்பாட்டை மீட்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்ததையும் காண முடிந்தது. சுமார் 47 வினாடிகளுக்கான அந்தக் காணொளி சமூக ஊடகத்தில் வெகுவாகப் பரவியது.

குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஆக்சிஜன் இருப்பு இல்லை எனும் குற்றச்சாட்டை மருத்துவமனை ஏற்க மறுத்தது.

ஆயினும், அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் உட்பட சாட்சிகள் அங்கு உயிரிழந்த நால்வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாகவே குறிப்பிட்டனர்.

காணொளியை ஆராய்ந்த எகிப்து மற்றும் அமெரிக்க மருத்துவர்கள், அந்தச் சூழலில் ஆக்சிஜன் வழங்கல் குறைவாக இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் அதனையே குறிப்பிட்டது.

மருத்துவமனைக்கு ஆக்சிஜன் தேவை என்று சுகாதார அமைச்சிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அன்று மாலை 6 மணிக்கு வந்து சேர வேண்டிய ஆக்சிஜன் கலன்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை முதல் முதியோர் வரையிலான மற்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தில் தடையேதும் இருக்கவில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது. உயிரிழந்த நால்வரும் வயதானவர்கள் என்று கூறப்படும் நிலையில், அவர்களது மரணத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon