மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் சரக்கு வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டிருப்பதை அடுத்து, இரு நாடுகளுக்கிடையிலான தரைவழி எல்லைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர், ஜோகூர்பாரு இடையிலான எல்லைப் பகுதியில் இரண்டாம் இணைப்பு 24 மணி நேரமும் செயல்படும் நிலையில், காஸ்வே காலை 7 முதல் இரவு 7 மணிவரை 12 மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது என ஜோகூர் டிரக்கிங் சங்கத் தலைவர் நோவன் ஹிங் தெரிவித்தார்.
அதனால், காஸ்வேயில் வேலை நேரத்தை நீட்டிக்கும்படி சரக்கு வாகனங்களின் ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இரு நாட்டு அரசாங்கங்களும் இந்த கோரிக்கைக்கு செவிமடுக்கும் என சரக்கு வாகன ஓட்டுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் கடந்த மார்ச் மாதத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது முதலே காஸ்வே, இரண்டாம் இணைப்பு வழியாக டிரக், லாரி போன்றவற்றின் போக்குவரத்து தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருந்தாலும் நெரிசல் அங்கு பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் காஸ்வேயின் வேலை நேரம் 12 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பாலத்தைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே அதற்குக் காரணம்.
ஆயினும் கடந்த செப்டெம்பர் முதல் காஸ்வே, இரண்டாம் இணைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சீனப் புத்தாண்டு நெருங்கி வருவதால், அந்தப் பாதைகளைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன நெரிசல் காரணமாக அண்மைய நாட்களில் 8 முதல் 10 மணி நேரம் வரை ஓட்டுநர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் அண்மையில் கொவிட்-19 பரிசோதனை, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதும் இந்தத் தாமதத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், வாகன ஓட்டுநர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும்போது பயன்படுத்துவதற்காக தற்காலிக கழிவறைகள் போன்ற வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுத்தால் நல்லது என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

