அந்தமான் கடலில் தத்தளிக்கும் ரோஹிங்யா மக்களை மீட்க வலியுறுத்து

1 mins read
429a0aff-8a8b-4ea5-81df-fed63c88108d
அந்தமான் கடலில் படகில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ரோஹிங்யா மக்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று ஐநாவின் அகதிகள் அமைப்பு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

அந்தமான் கடலில் படகில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ரோஹிங்யா மக்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று ஐநாவின் அகதிகள் அமைப்பு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

உணவு, தண்ணீர் இன்றி அகதிகள் தத்தளிக்கின்றனர். சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு நீர் வற்றிப்போய் அவதிப்படுகின்றனர் என்று அகதிகள் அமைப்பு கூறியது. சில பயணிகள் படகிலேயே இறந்துவிட்டதாகவும் தெரிகிறது என்று அது மேலும் தெரிவித்தது.

பங்ளாதேஷின் கடலோரப் பகுதியான காக்ஸ் பசாரிலிருந்து பத்து நாட்களுக்கு முன்பு கிளம்பிய படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிலிலுள்ள பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் உயிர்ச்சேதம் அதிகரிக்கலாம் என்ற சூழ்நிலையில் ஐநா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

"அகதிகளின் படகு இருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் கடலோரமுள்ள நாடுகளின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களை காப்பாற்ற உடனடி உதவி தேவைப்படுகிறது. அப்போதுதான் மேலும் உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும்," என்று ஐநா அகதிகளுக்கான ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இதற்கிடையே ரோஹிங்யா அகதிகளின் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அது பாதுகாப்பாக இருப்பதாகவும் ராய்ட்டர்சிடம் இந்திய கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் படகின் நிலவரம் குறித்து தெரியவில்லை என்று இந்திய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரிலிருந்து வெளியேறிய ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினர் அண்டை நாடான பங்ளாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவர்களில் பலர் மலேசியா, இந்தோனீசியாவை நோக்கி அடிக்கடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்