பிலிப்பீன்சில் கொவிட்-19 விதிமுறைகளை மீறியதற்காக உடற்பயிற்சித் தண்டனையைப் பெற்ற ஆடவர் ஒருவர் பின்னர் உயிரிழந்துவிட்டார்.
அந்த ஆடவர் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் அவரை 300 முறை அதிகாரிகள் உடற்பயிற்சி செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட அந்நாட்டு மனித உரிமைக் குழு ஒன்று கோரியுள்ளது.
டேரன் மனாவோக் என்ற பெயருடைய அந்த ஆடவரின் வயது குறிப்பிடப்படவில்லை. ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அவருக்கு உடற்பயிற்சித் தண்டனை விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
பிலிப்பீன்சின் கவிட்டே மாநிலத்தில் உள்ள ஜெனரல் டிரியாஸ் நகரில் தண்ணீர் வாங்குவதற்காக கடைக்குச் சென்ற திரு மனோவோக்கை கடந்த வியாழக்கிழமை போலிசார் கைது செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த நாள் காலை திரு மனோவோக் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டது. ஆனால் திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் கோமாவுக்குச் சென்றார். அதே நாள் இரவு 10 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், திரு மனோவோக்கிற்கு தண்டனை விதித்த சம்பவத்துக்கு போலிசாருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை ஜெனரல் டிரியாஸ் நகர தலைமை போலிஸ் அதிகாரி மறுத்துள்ளார்.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த கவிட்டே மாநிலத்தில் கடுமையான தனிமை உத்தரவு நடப்பில் இருக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகிறது.

