சிங்கப்பூரில் நேற்று (ஏப்ரல் 19) சமூக அளவில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் 44 வயது உணவக மேலாளராவார்.
தஞ்சோங் பகாரில் உள்ள கோப்பெங் ஸ்திரீட்டில் 'ஸ்பைஸ் கிரில்' உணவகத்தையும் ரங்கூன் சாலையில் 'ரங்கூன் பார் அண்ட் பிஸ்ட்ரோ' உணவகத்தையும் அவர் நிர்வகிக்கிறார். கடைசியாக சென்ற வியாழக்கிழமை அவர் வேலைக்குச் சென்றார்.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான அந்த மேலாளர், 'ஓஎம் யூனிவெர்சல்' நிறுவனத்தில் பணிபுரியும் 41 வயது கணக்காய்வாளரின் கணவராவார். சிங்கப்பூர் நிரந்தரவாசியான அந்தக் கணக்காய்வாளருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தொற்று உறுதியானது.
தமது மனைவியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அந்த உணவக மேலாளர் அடையாளம் காணப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை இல்லத் தனிமையில் வைக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட தொற்றுப் பரிசோதனையில் தொற்று உறுதியானது.
அவரிடம் தொற்றுக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் (ஏப்ரல் 18) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

