'இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வருவோருக்குத் தடை விதிக்கும் நடைமுறை, நாட்டுரிமையை சார்ந்தது அல்ல'

'இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வருவோருக்குத் தடை விதிக்கும் நடைமுறை, நாட்டுரிமையை சார்ந்தது அல்ல'

2 mins read
521c2006-5088-4904-9190-8883b7192f81
கடந்த 14 நாள்களுக்குள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர், குறுகியகால வருகையாளர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: இபிஏ -

இந்தியாவுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டவர்கள் சிங்கப்பூருக்கு வர விதிக்கப்பட்டுள்ள தடை, நாட்டுரிமையைச் சார்ந்தது அல்ல என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் இன்று (ஏப்ரல் 26) கூறியுள்ளார்.

கடந்த 14 நாள்களுக்குள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர், குறுகியகால வருகையாளர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணி முதல் இந்த விதிமுறை நடப்புக்கு வந்தது.

இந்த எல்லைக் கட்டுப்பாடுகளில் இருந்து தப்பிக்க, சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் இந்திய நாட்டவர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்வது குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பது பற்றி அமைச்சரிடம் கேட்கப்பட்டது.

"நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் சரி, ஓர் இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குத் தங்கியிருந்தால், அந்த இடத்தின் கிருமித்தொற்று அபாயம் உங்களுக்குப் பொருந்தும்.

"நீங்கள் வேறொரு நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம், ஆனால் புதியதொரு நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் தங்கியிருந்தால், அந்த நாட்டின் கிருமித்தொற்று அபாயம் உங்களுக்குப் பொருந்தும்," என்று திரு ஓங் விளக்கமளித்தார்.

இந்தக் கொள்கை இந்திய நாட்டவரைக் குறிவைப்பது என்றால் "ஏதோ தவறு இருக்கிறது" என்றார் அவர்.

"ஆனால், இந்தக் கொள்கை கிருமித்தொற்று அபாயத்தைக் குறிவைத்தால், கிருமித்தொற்று அபாயம் அதிகம் உள்ள நாட்டிலிருந்து கிருமித்தொற்று அபாயம் குறைவாக உள்ள நாட்டிற்கு ஒருவர் சென்று, அங்கு சற்று காலம் தங்கி, கிருமித்தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருந்து அதன் பிறகு அவர் சிங்கப்பூர் வந்தால், அவருக்கு கிருமித்தொற்று அபாயம் குறைந்திருக்கிறது என்று கூறலாம்," என்று திரு ஓங் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்