சிங்கப்பூரின் கட்டுமானத் துறைக்குக் கூடுதல் ஆதரவு வழங்க புதிதாக மூன்று நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
சீனாவிலிருந்து வரும் ஊழியர்களை வேலையில் அமர்த்த நடப்பில் உள்ள விதிமுறைகளைத் தளர்த்துவது அவற்றில் அடங்கும்.
இந்தியாவுடனான எல்லைக் கட்டுப்பாடுகளின் காரணமாக கட்டுமானத் துறையில் மனிதவள தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 7ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு சீனாவைச் சேர்ந்த வேலை அனுமதி அட்டை ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு தங்கள் திறன் சான்றிதழை சீனாவில் நிறைவு செய்யத் தேவையில்லை.
சிங்கப்பூருக்கு வருவதற்குத் தகுதி, வேலை அனுமதி அட்டை பெறும் தகுதி ஆகியவை இருந்தால் போதும் என்று கட்டட, கட்டு மான ஆணையம் நேற்று தெரிவித்தது. தங்களுக்குத் தேவையான திறன் சான்றிதழை அவர்கள் சிங்கப்பூரில் பெற்றுக்கொள்ளலாம்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் கட்டுமானப் பணிகள் தாமதம் அடைந்துள்ளன.
புதிய திட்டத்தின்படி கட்டுமான ஒப்பந்தங்களுக்கு 49 நாள் நீட்டிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்படும்.
இது கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை உற்பத்தித்திறனில் ஏற்பட்ட இழப்பு காரணமாக தாமதமடைந்த அரசாங்கத்துறை கட்டுமான ஒப்பந்தங்களுக்கும் பொருந்தும்.
49 நாள் நீட்டிப்பைப் பெற ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை.
அதுமட்டுமல்ல, அரசாங்கம் ஏற்கும் தொகை தொடர்பான தகுதிச் செலவுகளுக்கான விரிவான ஆதாரத்தை குத்தகைதாரர்கள் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
இருப்பினும், அரசாங்கம் ஏற்கும் தொகைக்கு மேலான தகுதிச்செலவுகளைக் கோர விரும்புபவர்கள் தொடர்ந்து அதற்கான ஆதாரத்துடன் விண்ணப்பம் செய்யலாம்.
புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் மூன்று புதிய திட்டங்கள் பற்றிய விவரங்கள் தயாரானதும் கட்டுமானத் துறையுடன் அவை பகிர்ந்துகொள்ளப்படும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் கூறியது.
இந்தப் புதிய நடவடிக்கைகள் இந்திய ஊழியர்களை அதிகம் நம்பியிருக்கும் நிறுவனங்களுக்கு முக்கியம் என்று ஆணையம் கூறியது.

