இந்தியாவிற்கு ஆதரவளிக்க சிங்கப்பூரில் நிதிதிரட்டு

இந்தியாவிற்கு ஆதரவளிக்க சிங்கப்பூரில் நிதிதிரட்டு

2 mins read
d0095c9c-82cb-44f5-9bc3-e50c951d414c
இந்தியாவின் ஸ்ரீநகரில் உள்ளரங்கு ஒன்றை கொவிட்-19 மையமாக மாற்றும் தயாரிப்புப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். படம்: ஏஎஃப்பி -

கொவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய நிவாரண நிதித்திரட்டுத் திட்டம் ஒன்று சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையும் (சிக்கி) லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கமும் (லிஷா) இணைந்து இந்தத் திட்டத்தை நேற்று (ஏப்ரல் 26) தொடங்கின.

"கொரோனா பரவல் இந்திய மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதுடன் அந்நாட்டில் பல்வேறு நெருக்கடிகளுக்கும் வித்திட்டுள்ளது. இந்தியா தனது சுகாதார சேவைகளில் எதிர்கொள்ளும் பெரும் நெருக்கடியைச் சமாளித்து நிர்வகிக்க 'சிக்கி'யும் 'லிஷா'வும் இணைந்து நிதி திரட்டி ஆதரவளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன," என்று அவ்விரு அமைப்புகளும் ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்து இருக்கின்றன.

திரட்டப்படும் நிதி முழுவதும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கப்படும். எந்த வழிகளில் அந்நிதி பயன்படுத்தப்படும் எனும் விவரம் பின்னொரு நாளில் வெளியிடப்படும்.

இந்த 'இந்தியா கொவிட் நிவாரண நிதி' மூலம் எளிதில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்ய 'சிக்கி'யும் 'லிஷா'வும் சிங்கப்பூர், இந்திய அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்.

உடனடி, அவசரத் தேவைகள் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்காக சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் இந்திய சுகாதார, குடும்ப நல்வாழ்வு அமைச்சின் மருத்துவச் சாதன விநியோகப் பங்காளிகளை 'சிக்கி' அணுகியிருக்கிறது.

"விரைந்து பரவி வரும் கொரோனாவால் நேரடியாக அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களைக் காக்க உதவும் வகையில் அவசரகாலத் தேவை மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். கூடுதல் உதவி தேவைப்படும், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய மாநிலங்களிலும் மருத்துவமனைகளிலும் உயிர்காப்பு உதவியை அதிகரிக்கவும் கவனம் செலுத்துகிறோம்," என்று அவ்விரு அமைப்புகளும் கூறியுள்ளன.

இந்தியாவிற்கு அவசரமாக செயற்கை சுவாசக் கருவிகளும் ஆக்சிஜன் செறிவூட்டிகளும் தேவை என்றும் அவை குறிப்பிட்டுள்ளன.

"இதற்குமுன் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி என்பதால் இந்தியாவின் தோளோடு தோள் நிற்க விரும்புகிறோம். அந்நாட்டிற்கு உடனடி, அவசர உதவிகள் தேவைப்படும் என்பதால் 'சிக்கி'யும் 'லிஷா'வும் முன்னெடுத்துள்ள நிதிதிரட்டு முயற்சிக்கு ஆதரவு தரும்படி ஒட்டுமொத்த சிங்கப்பூர் சமூகத்திற்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்," என்று 'சிக்கி' தலைவர் டாக்டர் டி.சந்துரு தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் 9654-1346 மற்றும் 6222-2855 என்ற எண்கள் வழியாக அல்லது indiacovidfund@sicci.com எனும் மின்னஞ்சல் வழியாக 'சிக்கி கேர்ஸ்' அமைப்பைத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்