இந்தியாவை அச்சுறுத்தும் தொற்று: அன்புக்குரியவர்களை நினைத்து வாடும் சிங்கப்பூர்வாழ் இந்தியர்கள்

இந்தியாவை அச்சுறுத்தும் தொற்று: அன்புக்குரியவர்களை நினைத்து வாடும் சிங்கப்பூர்வாழ் இந்தியர்கள்

3 mins read
91893496-d7c2-4af3-b913-f62e57b4a9a6
கொரோனா கிருமித்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ள மண்டபத்தில் ஆஸ்சிஜன் செறிவூட்டிகளின் உதவியுடன் சுவாசிக்கும் நோயாளிகள். படம்: ஏஎஃப்பி -

கொவிட்-19 தொற்று இந்தியாவை அச்சுறுத்தி வரும் இவ்வேளையில், சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் வாழும் தங்கள் உற்றார் உறவினரை எண்ணி கலக்கத்தில் உள்ளனர்.

சிங்கப்பூரின் கெம்பங்கானில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த செல்வி ஷுபாதா மிஷ்ரா, நிதித்துறை தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் அதிகாலை உறக்கத்தில் இருந்து கண்விழித்ததுமே, முதல் வேலையாக ஹைதராபாத் நகரில் வாழும் தன் வருங்காலக் கணவர் திரு ஸக்வான் கானின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கைத்தொலைபேசி வழியாகத் தெரிந்துகொள்வதுதான் என்கிறார்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திரு கான், ஒரு நீரிழிவு நோயாளி, அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது நண்பர் தொற்றுப் பாதிப்புக்குள்ளாகி இப்போது வீட்டில் குணமடைந்து வருகிறார்.

ஏனெனில், பெருகி வரும் கொவிட்-19 நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றனர். புதிய நோயாளிகள் படுக்கை வசதியின்றி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இது பெரும் அச்சத்தைத் தந்துள்ளதாக தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார் செல்வி ஷுபாதா மிஷ்ரா.

பேரழிவைத் தரும் வகையில் கொவிட்-19 தொற்று இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் செல்வி மிஸ்ராவைப் போல சிங்கப்பூரில் இந்தியர்கள் பலர், இந்தியாவில் வாழும் தங்கள் அன்புக்குரியவர்களை எண்ணி கடந்த சில நாட்களாகக் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.

செல்வி மிஸ்ராவின் வருங்காலக் கணவர் திரு கானின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், திரு கான் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டு வருகிறார். அவரை அவ்வப்போது கவனித்துக்கொள்ளும் நண்பரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தொற்றுக்கு ஆளான பக்கத்து வீட்டுக்காரரால் திரு கானுக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் நாள்தோறும் தன்னை வாட்டுவதாகவும் மனஇறுக்கத்திற்கு ஆளாக்குவதாகவும் கூறுகிறார் செல்வி மிஸ்ரா. சிங்கப்பூரில் நான் பாதுகாப்பாக இருப்பதை எண்ணி ஒரு புறம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும் இன்னொரு புறம் இந்தியாவில் தொற்றுப் பாதிப்பால் சிரமப்படும் என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தம்மால் உதவ முடியவில்லையே என வருந்துவதாகக் கூறுகிறார் மிஸ்ரா.

குளோபல் இந்தியன் இண்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் திருமதி லதா பிரதீப், 47. இவரது மூத்த மகளும் பெற்றோரும் கேரளாவின் கோழிக்கோடில் வசித்து வருகின்றனர்.

திருமதி லதாவின் 23 வயது மகள் அங்கு மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகின்றனர். அவர் பயிலும் மருத்துவக்கல்லூரியில் ஒரு பகுதி கொவிட்-19 நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. அவரது மகள் அங்கு முன்களப்பணியாளர்களில் ஒருவராகப் பணிபுரிந்து வருகிறார். தனது மகள் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் வீட்டிலுள்ள தனது பெற்றோருக்கு அவரால் தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாகக் கூறுகிறார் திருமதி லதா. வேலைக்குச் செல்வதால் இந்தக் கவலைகளில் இருந்து சற்று திசை திருப்பப்படுகிறோம். இருப்பினும் மற்ற நேரங்களில் இந்தியாவில் உள்ள தன் குடும்பத்தினரை நினைத்து வாடும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் திருமதி லதா.

திரு புலாக் ரிஷி, 34, குமாரி சௌமியா பார்கவா, 33 ஆகியோர் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்தவர்கள்.

சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இவர்களின் பெற்றோர் இருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு தங்களால் எந்த ஓர் உதவியையும் செய்ய முடியாதது குறித்து வருந்துவதாகக் கூறுகின்றனர்.

மென்பொருள் உருவாக்கத்துறையில் வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் திரு ரிஷி, தன் பெற்றோரின் உடல்நிலை குறித்து மருத்துவர் இன்று என்ன சொல்லப் போகிறார் என்று ஒவ்வொரு நாளும் தவித்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எப்போது என்ன நடக்கும் என்ற ஒரு நிலையற்ற போக்குடன் எங்கள் வாழ்க்கையை அனுபவிப்பதாகக் கூறுகிறார்.

குமாரி பார்கவா, "இந்தக் கொரோனா எங்களை துயரப் படுகுழியில் தள்ளிவிட்டது. எங்கோ வாழும் எங்கள் குடும்பத்தினரை நினைத்து வாடும்போது மரணம், துன்பம் என திகில் கதைகளைப் படிப்பதைப் போன்று உணர்கிறேன். தினமும் அச்சத்தால் என் ஆன்மாவின் ஒரு பகுதி உயிரிழந்து வருவதைப்போல் உணர்கிறேன்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாசிங்கப்பூர்கிருமித்தொற்று