தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூச்சு திணறும் இந்தியாவுக்கு முதலுதவி செய்யும் சிங்கப்பூர்; உயிர்நாடியாக உதவிக்கரம்

2 mins read
3d8b160e-da12-4c50-94df-1c9e3487c19a
சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் உறைகலன்கள், இந்தியாவின் விமானப்படை விமானத்தில் ஏற்றி எடுத்துசெல்லப்பட்டு மேற்கு வங்காளத்தில் உள்ள பனாகரா என்ற விமானப்படை தளத்தில் தரை இறங்கின. படம்: ஏஎன்ஐ -

இந்தியா, கொவிட்-19 தொற்று இரண்டாவது அலையால் மூச்சுவிடத் திணறிவரும் நிலையில், அங்கு நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க சிங்கப்பூர் பலவழிகளிலும் கைகொடுத்து, நம்பகமான பங்காளியாகத் திகழ்ந்து வருகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு மூன்று வரி குறுஞ்செய்தியை அனுப்பியதை அடுத்து, இந்தியாவின் 'மிஷன் ஆக்சிஜன்' திட்டத்திற்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது இந்தியா, சிங்கப்பூருக்கு ஆதரவுக்கரம் நீட்டியதை நினைவுகூர்ந்த டாக்டர் விவியன், இம்முறை தங்களாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

இந்திய விமானப் படையின் சி-17, ஐஎல்-76, சி-130 விமானங்கள் மூலமாக 46 உறைகலன்கள் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவைச் சென்றடைந்தன.

அத்துடன், ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட கருவிகளை சிங்கப்பூரிடம் இருந்து இந்தியா பெற்றுள்ளது.

அவை இந்திய விமானப் படை விமானங்கள் மூலமாகவும் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் மூலமாகவும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

கடந்த மாதம் 28ஆம் தேதி, சிங்கப்பூர் விமானப் படையின் இரு விமானங்கள் ஆக்சிஜன் உருளைகளையும் வேறு மருத்துவப் பொருள்களையும் ஏற்றிக்கொண்டு இந்தியா சென்றன.

தெமாசெக் அறநிறுவனம், வேறு பல சிங்கப்பூர் நிறுவனங்களுடன் கைகோத்து, 8,000க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள், 51,000 ஆக்சிமீட்டர்கள், 27 செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்நிலையில், நிரப்பப்பட்ட 15 உறைகலன்களையும் கிட்டத்தட்ட 5,000 ஆக்சிஜன் உருளைகளையும் ஏற்றிச் செல்ல இந்தியக் கடற்படையின் ஜலஷ்வா கப்பல் நாளை (மே 15) சிங்கப்பூரை வந்தடைய இருக்கிறது.

சிங்கப்பூரிடம் இருந்து மருத்துவ உதவிகளைப் பெற்றுத் தருவதில் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பி.குமரன் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

ஐஐடி, ஐஐஎம் ஆகிய கல்வி நிலையங்களின் முன்னாள் மாணவர் சங்கங்கள், டிஐஇ சிங்கப்பூர், சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை (சிக்கி), லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) போன்ற அமைப்புகளும் நிதி திரட்டியும் மருத்துவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்து அனுப்பி வைத்தும் உதவி வருகின்றன.

டெல்லி புறநகர்ப் பகுதிகளில் இருப்பது போன்ற மக்கள்தொகையைக் கொண்டுள்ள சிறிய நாடாக இருப்பினும், இந்தியாவில் மருத்துவ நெருக்கடி நிலவும் இவ்வேளையில், சிங்கப்பூர் முக்கிய உயிர்நாடியாக விளங்கி வருவதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' செய்தி ஊடகம் புகழாரம் சூட்டியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்