வயது முதுமை உள்ளிட்ட பல காரணங்களுக்காக சிங்கப்பூரில் வீட்டைவிட்டு வெளியேற முடியாதோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால், அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் சேவை இன்று (மே 18) அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் மற்றும் தாதி அடங்கிய தடுப்பூசி போடும் குழுக்கள், அத்தகையோரின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும்.
கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு இன்று (மே 18) நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் பேசிய அவர், சிங்கப்பூரில் இதுவரை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது போட்டுக்கொண்டதாக தெரிவித்தார். அவர்களில் 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டு தடுப்பூசி திட்டத்தை நிறைவு செய்தனர். ஆக மொத்தத்தில், இதுவரை 3.4 மில்லியன் அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதம் "நம்பிக்கையளிப்பதாக" சுகாதார அமைச்சு கூறியது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 71 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர்.
45 முதல் 59 வயதுப் பிரிவினரில் கிட்டத்தட்ட 66 விழுக்காட்டினர் அவ்வாறு செய்துள்ளனர்.
மூத்தோரில் சிலர் கட்டிலில் படுத்த படுக்கையாக அல்லது வெளியே செல்ல முடியாமல் வீட்டில் இருக்கக்கூடும் என்று அமைச்சர் ஓங் சொன்னார். இந்தப் பிரிவினரின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட சுகாதார மேம்பாட்டு வாரியம், ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான முகவை (ஏஐசி) ஆகியவற்றுடன் இணைந்து சுகாதார அமைச்சு செயல்படும்.

