ஊழியருக்குக் கிருமித்தொற்று; அலெக்சாண்டிரா மருத்துவமனை வார்டுக்குச் செல்ல வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை

ஊழியருக்குக் கிருமித்தொற்று; அலெக்சாண்டிரா மருத்துவமனை வார்டுக்குச் செல்ல வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை

1 mins read
87bcf675-b904-4748-aeab-76035918cab7
ஊழியர் சென்றிருந்த வேறு சில பகுதிகளையும் மருத்துவமனை அடையாளம் கண்டு நன்கு சுத்தம் செய்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அலெக்சாண்டிரா மருத்துவமனை வார்டு ஒன்றில் அடிப்படை தாதிமைப் பராமரிப்பு வழங்கிய 24 வயது சிங்கப்பூரர் ஒருவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதியானதை அடுத்து அந்த வார்டுக்குச் செல்ல வருகையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு நேற்று அறிவித்திருந்த புதிய கிருமித்தொற்று சம்பவங்களில், தொடர்பு கண்டறியப்படாத நான்கு நோயாளிகளில் அந்த மருத்துவமனை ஊழியரும் அடங்குவார்.

வார்டு பணியில் ஈடுபட்டிருந்த அந்த மருத்துவனை ஊழியர், தனிநபர் பாதுகாப்புச் சாதனங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றினார் என்றும் மருத்துவமனை இன்று (மே 20) காலை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த ஊழியருடன் அணுக்கமான தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களது எச்சில், சளி மாதிரிகள் திரட்டப்பட்டு வருவதால், வருகையாளர்கள் அக்குறிப்பிட்ட வார்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டர் என்று கூறப்பட்டது.

ஊழியர் சென்றிருந்த வேறு சில பகுதிகளையும் மருத்துவமனை அடையாளம் கண்டு நன்கு சுத்தம் செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

ஊழியர் 10 நாட்களாக விடுப்பில் இருந்துவிட்டு திங்கட்கிழமையன்று வேலைக்குத் திரும்பினார். அதே நாளில் அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் அவரிடம் காணப்படவில்லை.

இருப்பினும், சில மணி நேரத்தில் அவருக்கு இருமல் ஆரம்பித்தது. மறுநாள் வெளிவந்த அவரது பரிசோதனை முடிவு, தெளிவற்ற நிலையில் இருந்ததால் அவர் உடனே தனிமைப்படுத்தப்பட்டார்.

அதே நாள் இரண்டாவது பரிசோதனை செய்ததில் அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.

குறிப்புச் சொற்கள்
மருத்துவமனைகிருமித்தொற்று