குழந்தைகள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பில்லை: நிபுணர்கள் கருத்து

குழந்தைகள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பில்லை: நிபுணர்கள் கருத்து

2 mins read
52c9397f-afa8-4736-8472-070ba7ecc169
-

சிங்கப்பூரில் கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 30 பள்ளிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்களை கொவிட்-19 தொற்றிவிட்டது.

இருப்பினும், குழந்தைகளை கொரோனா தொற்ற இப்போதைக்கு அதிக வாய்ப்புள்ளது என்று கூறுவதற்குப் போதுமான சான்றுகள் இல்லை என்றும் அவர்கள் ஒருவருக்கொருவர் அருகில் இருப்பதே அண்மைய தொற்று அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, புதிய உருமாறிய கிருமிகள் அதிகம் தொற்றக்கூடியவை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

லேனிங் பாய்ண்ட் துணைப்பாட நிலைய கிருமித்தொற்றுக் குழுமத்தில் மட்டும் நேற்று வரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நாளில், பள்ளியில் கொரோனா தொற்றிய முதல் சம்பவமும் பதிவாகி இருக்கிறது.

ஆயினும், இப்போது சுற்றிக்கொண்டிருக்கும் உருமாறிய கிருமிகள் குழந்தைகளை அதிகம் பாதிக்கவல்லவை என்பதற்குப் போதுமான சான்றுகள் இல்லை என்கிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் தொற்றுநோய்கள் உருமாற்ற ஆய்வுதத் திட்டத்தின் துணை இயக்குநர் பேராசிரியர் பால் தம்பையா.

மாறாக, துணைப்பாட நிலையம் அல்லது பள்ளிப் பேருந்து போன்ற சூழல்களே அதிகமான குழந்தைகளை கொவிட்-19 தொற்றியதற்குக் காரணம் என்றார் அவர்.

"முதலில் பரவிய கொரோனா கிருமியைக் காட்டிலும் பி1617 எனும் உருமாறிய கிருமி குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என்பதை இது சுட்டவில்லை. இந்தியாவில் கொரோனா முதல் அலையிலும் இரண்டாம் அலையிலும் பாதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் ஒத்த அளவில் இருப்பதை பிடிஐ செய்தி நிறுவனத்தின் அதிகாரபூர்வ தரவுகள் காட்டுகின்றன," என்று பேராசிரியர் தம்பையா கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பள்ளிமாணவர்கிருமித்தொற்று