சிங்கப்பூரில் மொடர்னா தடுப்பூசியைவிட ஃபைசர்-பயோஎன்டெக் ஊசியையே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். 12 முதல் 39 வரை வயதுள்ளவர்கள் பதியலாம் என்று அறிவிப்பு வெளியானதுமே ஃபைசர் தடுப்பூசிக்கே அதிகம் பேர் முன்பதிவு செய்தனர்.
சிங்கப்பூரர்கள் இந்த இரண்டில் எந்த ஊசியை வேண்டுமானாலும் தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வேண்டாத விளைவுகள் குறைவு என்று கூறப்படுவதன் காரணமாக சிலர் ஃபைசர் ஊசியை விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.
18 வயதுக்குக் குறைவான இளையர்களுக்கு ஃபைசர் ஊசி மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக மொடர்னா ஊசி போட்டுக்கொள்ள விரும்புவோருக்கு முன்னதாகவே வாய்ப்பு கிடைக்கும் என்று சில நாட்களுக்கு முன் கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் தலைவர்களில் ஒருவரான சுகாதார அமைச்சர் ஓங் யி காங் செய்தியாளரிடம் கூறினார்.
இதனிடையே, மொடர்னா ஊசி போட்டுக்கொள்ள விரும்வோர் ஜூன் 12ஆம் தேதியே அதற்கான வாய்ப்பைப் பெற முடிந்ததாகவும் ஃபைசர் ஊசி எனில் ஜூன்21 வரை காத்திருக்கவேண்டும் என்பதும் வெள்ளிக்கிழமை தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

