தனிமைப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக பிரிட்டனில் மக்கள் கொவிட்-19 தொடர்பு தடமறிதல் செயலியை நீக்கிவிடுவதாக அந்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் விஞ்ஞானிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும், பிரிட்டன் மற்றும் வேல்ஸில் ஆக அதிகமாக கிட்டத்தட்ட 620,000 பேருக்குத் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான செயலிச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. முந்தைய வாரம் அந்த எண்ணிக்கை 530,000ஆக இருந்தது.
தனிமைப்படுத்தலுக்கான குறுஞ்செய்தி காரணமாக பலர் வேலைக்குச் செல்ல முடியாதது முக்கிய தொழிற்துறைகளில் தாக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. எனவே, அதிகமானோர் செயலியை நீக்கிவிடுகிறார்கள் அல்லது செயலியின் தடமறிதல் அமைப்பை மட்டும் முடக்கிவிடுகிறார்கள்.
ஆனால் கிருமிப் பரவலைத் தடுப்பதற்கு தொடர்பு தடமறிதல் செயலி முக்கியம் என்று அரசாங்கமும் சுகாதார நிபுணர்களும் கூறுகின்றனர்.
இந்த மாதம் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், இங்கிலாந்தின் 18 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தடமறிதல் செயலியை நீக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

