வழக்கமான மருத்துவ கவனிப்பு தொடங்க பல மாதங்கள் ஆகும்

2 mins read
6b1cebd8-76e8-4ad6-8be4-a3ebe060af4b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உயர்ந்து வரும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்கும் பொருட்டு, மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கான அடுத்தமுறை கவனிப்புகள், முன்கூட்டியே செய்யப்படவிருந்த அறுவை சிகிச்சைகள் எனப் பலவும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

தள்ளிவைக்கப்பட்ட இந்த சிகிச்சைகளை மேற்கொண்டு முடிக்க மருத்துவமனைகளுக்கு பல மாதங்கள் ஆகலாம். சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவை இயக்குநர் இணைப் பேராசிரியர் கென்னத் மாக் சிங்கப்பூர் மருத்துவ, உயிர்மருத்துவத் துறை மாநாட்டில் நடந்த கலந்துரையாடல் அமர்வில் இதைத் தெரிவித்தார்.

பெருந்தொற்றுச் சூழலில், நாட்பட்ட நோய் உள்ள பலரும் வழக்கமான மருத்துவ கவனிப்புக்காக மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாது உள்ளனர் என்று பேராசிரியர் மாக் கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து, கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் இந்நிலை ஏற்பட்டது.

"மருத்துவமனைக்கு வர முடியாத பலருக்கான கவனிப்பையும் தொலைதூர சுகாதாரத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்துள்ளோம். ஆனால் அது எல்லாருக்கும் பொருந்தாது," என்றார் பேராசிரியர் மாக்.

"வழக்கமான மருத்துவமனை கவனிப்பு பெற முடியாமல் நோய் மோசமான சிலர் வருவார்கள். அவர்கள் தங்கள் மருந்துகளை உட்கொள்ளாமல் போயிருக்கலாம். அல்லது மருந்துகள் தீர்ந்த பின்னர் மீண்டும் பெறாமல் இருந்திருக்கலாம்," என்று அவர் கூறினார்.

மருத்துவமனைகள் தற்போது கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

எனினும் நாட்பட்ட நோயுள்ளவர்களைக் கவனிக்க தொடர்புத் திட்டங்கள் உள்ளதாக அவர் சொன்னார்.

"நோய் மோசமாகிவிட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லாவிட்டாலும், தள்ளிப் போனவற்றைச் சரிசெய்ய பல மாதங்கள் ஆகும்," என்றார் அவர்.

முன்கூட்டியே செய்யப்படவிருந்த அறுவை சிகிச்சைகள், ஒரே நாளில் செய்து வீடு திரும்பும் அறுவை சிகிச்சைகள், பெரிய அறுவை சிகிச்சைகள் போன்றவையும் தள்ளிப்போயிருப்பதாக அவர் விவரித்தார்.

இப்போதைக்கு அவசரத் தேவையுள்ளவர்களுக்கும் புற்றுநோயுள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர் மாக் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்