மியன்மாரில் 1,000 அரசியல் கைதிகள் விடுவிப்பு

மியன்மாரில் 1,000 அரசியல் கைதிகள் விடுவிப்பு

2 mins read
5427bdeb-3ce1-4926-a5b3-bb149b544ee0
விடுவிக்கப்பட்ட கைதிகள். படம்: ஏஎஃப்பி -

யங்கூன்: மியன்மார் ராணுவ அரசாங்கம் இன்சீன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை நேற்று திங்கட்கிழமை விடுவித்தது.

மியன்மாரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆசியான் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அனைத்துலக அளவில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எதிர்வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அந்நாட்டின் ராணுவத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மாறாக அரசியல் சார்பற்ற பிரதிநிதி ஒருவர் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது.

இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் 5,600க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை மன்னித்து விடுவிக்கவுள்ளதாக திங்கட்கிழமையன்று மியன்மார் ராணுவத் தலைவர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மியன்மார் முன்னாள் தலைவர் திருவாட்டி ஆங் சான் சூச்சியின் கட்சி செய்தித் தொடர்பாளரும் பிரபல நகைச்சுவை நடிகருமான சர்கனர் உட்பட 1,000 பேர் நேற்று விடுவிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் சரிந்துவிட்ட நற்பெயரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ராணுவ ஆட்சியின் சூழ்ச்சி இது என்று ஆர்வலர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஐநா சிறப்பு அதிகாரி டாம் ஆண்ட்ரூஸ், மியன்மாரின் இந்நடவடிக்கையை வரவேற்றிருந்தாலும், இவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு மியன்மார் ராணுவ அரசாங்கத்தின் மனமாற்றம் காரணமல்ல, அவர்கள் மீதான அழுத்தம் ஒன்றே காரணம் என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக ராணுவ ஆட்சியின்கீழ் இருக்கும் மியன்மாரின் மக்கள்தொகையில், கிட்டத்தட்டப் பாதிப் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகவும் அங்கு 20 ஆண்டுகள் காணாத வறுமை நிலவுவதாகவும் ஐநா கூறியுள்ளது.

மனிதாபிமான உதவி தேவைப்படுவோர் எண்ணிக்கை எட்டு மாதங்களில் ஒரு மில்லியனில் இருந்து மூன்று மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கொவிட்-19 கிருமிப் பரவல், ராணுவப் புரட்சி, வன்முறை போன்ற தொடர் நெருக்கடிகளே மியன்மாரின் இந்த நிலைக்குக் காரணம் என்கிறது ஐநா.

குறிப்புச் சொற்கள்