நான்கு மில்லியன் பேர் வசிக்கும் நகர் ஒன்றை சீனா இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26) முடக்கியுள்ளது.
வடமேற்கு சீனாவில் உள்ள லான்ஸோவ் எனும் அந்த நகரில் அவசரத் தேவைகளைத் தவிர்த்து வேறு எந்த காரணங்களுக்காகவும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
லான்ஸோவில் ஆறு பேர் உட்பட சீனாவில் புதிதாக வெறும் 29 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. புதிதாக உருவெடுத்திருக்கும் கிருமித்தொற்றுக் குழுமத்தை ஒழிக்கும் நோக்கில் லான்ஸோவ் முடக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டிறுதியில் கொவிட்-19 தொற்று முதன்முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. அந்நாடு கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியதை அடுத்து, தொற்றுப் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பொருளியலும் மீட்சியடைந்து வருகிறது.
எனினும், கொவிட்-19 கிருமியுடன் சேர்ந்து வாழ மற்ற உலக நாடுகள் பழகிவரும் வேளையில், கொவிட்-19 தொற்றை ஒழிக்கும் அணுகுமுறையை சீனா இன்றளவும் கடைப்பிடித்து வருகிறது. குறிப்பிட்ட ஓர் இடத்தில் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுவிட்டால், அதைப் பரவவிடாமல் சீனா அப்பகுதியை முடக்கிவிடுகிறது.
ஆக அண்மையில் சீனாவில் உருவெடுத்துள்ள இந்தக் கிருமித்தொற்றுக் குழுமம், வேகமாகப் பரவும் டெல்டா வகை கிருமியுடன் தொடர்புடையது.

