கொவிட்-19 தொற்றி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் பன்னிரண்டு வயதுக்கும் குறைந்த சிறுவர்களாக இருக்கின்றனர்.
சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகள் பிரிவுக்கான இயக்குநர் இணைப் பேராசிரியர் கென்னத் மாக், வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) அன்று இதைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு கொவிட்-19 தொற்றுடன் தொடர்பான மூச்சுப் பிரச்சினை கொண்ட சிறுவர்களை இப்போது அதிகம் காண்பதாக கேகே மகளிர் குழந்தைகள் மருத்துவமனையும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையும் கூறின.
அதனுடன், தொற்றுடன் தொடர்பில்லாத மூச்சுப் பிரச்சினையுடன் வரும் பிள்ளைகளுக்கும் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் போக்கு அதிகரித்துள்ளது.
தற்போது, ஓமிக்ரான் தொற்றிய அதிகமான சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் அவர்கள் நீண்ட நாள்கள் மருத்துவமனையில் தங்கவோ, தீவிர சிகிச்சை பெறவோ தேவைப்படுவதில்லை.
மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் சிறுவர் எண்ணிக்கை அதிகமாகும்போது, கொவிட்-19 தொற்றுள்ள சிறுவர்களுக்காக ஒதுக்கப்படும் படுக்கைகளும் நிரப்பப்படுகின்றன. இருப்பினும், சிறுவர்களுக்கு தேவையான படுக்கைகள் இருப்பதை உறுதி செய்ய மருத்துவமனைகளுடன் சேர்ந்து சுகாதார அமைச்சு செயல்பட்டு வருவதாக இணைப் பேராசிரியர் மாக் கூறினார்.
சிங்கப்பூரில் 2021 அக்டோபர் முதல் தேதியிலிருந்து ஜனவரி 16 வரை , 12 வயதுக்கு உட்பட்ட 14,380 சிறுவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது.
அவர்களில் நான்கு சிறுவர்களுக்கு உயிர்வாயு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்பட்டது.
15 சிறுவர்களுக்கு கொவிட்-19 தொற்று தொர்பான அரிய வகை பல உறுப்பு அழற்சி நோய் ஏற்பட்டதாக டாக்டர் மாக் தெரிவித்தார்.

