கோலாலம்பூர்: மலேசியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, 96, தனது குடும்பத்தினருடன் பேசியதாக அவரது மகள் கூறினார்.
தனது தந்தையின் உடல்நிலை குறித்து மரினா மகாதீர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "நாங்கள் குடும்பமாக அவருடன் பேசினோம்.
"டாக்டர் மகாதீர் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலியின் சார்பாகவும் குடும்பத்தினர் அனைவரும் நன்றி தெரிவிக்கிறோம்," என்று கூறியிருந்தார்.
ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக டாக்டர் மகாதீர் முகமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவும் நேற்று தேசிய இதயநோய் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முழங்கால், கணுக்கால் பரிசோதனை, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சில நாள்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று மலேசிய அரண்மனை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
செப்டம்பர் 2020ல் எடுக்கப்பட்ட ஸ்கேனில் மன்னருக்கு விளையாட்டு தொடர்பான காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக அதற்கு பிறகான பரிசோதனைகள் தள்ளிப்போனதாகவும் அது கூறியது. சுவாச பரிசோதனை செய்துகொள்ளவும் மன்னர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

