கோலாலம்பூர்: மலேசியாவின் அம்னோ கட்சித் தலைவர் அகமது ஸாஹித் ஹமிடி, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வாதம் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸாஹித் மீது 47 ஊழல் குற்றச்சாட்டுகளை அரசாங்கத் தரப்பு நிரூபித்திருப்பதைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
யாயாசான் அகால்புடி எனும் அறநிறுவனத்தின் 124.31 மில்லியன் ரிங்கிட் (40 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய விதத்தில் அவர் நம்பிக்கை மோசடி தொடர்பில் 12, கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பில் 27, லஞ்ச ஊழல் தொடர்பில் 8 குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கு நடத்தப்பட்டது.
ஜோகூர் மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் ஸாஹித்திற்கு எதிரான இந்த உத்தரவு அம்னோவுக்குச் சற்று பின்னடைவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

