உலகம் முழுவதும் கொவிட்-19 அவசரநிலை இவ்வாண்டு முடிவுக்கு வரலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ் கூறியுள்ளார்.
"உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கொவிட்-19 தொற்றை நாம் முடிவுக்குக் கொண்டுவரலாம். அதுவும் இந்த ஆண்டே நாம் அவ்வாறு செய்யலாம்," என்று ஐக்கிய நாட்டு சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடம் திங்கட்கிழமை (ஜனவரி 24) அவர் கூறினார்.
அந்த நிலையை எட்ட, கொவிட்-19 தடுப்பூசிகளுக்கும் சிகிச்சை முறைக்கும் எல்லா நாடுகளுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய உலக நாடுகள் மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.
மேலும், கொவிட்-19 பரவலையும் புதிய திரிபுகள் உருவெடுப்பதையும் உலக நாடுகள் கண்காணித்து, கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து நடப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொவிட்-19 நோயுடன் வாழ உலகம் பழகிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை டாக்டர் டெட்ரோஸ் முன்வைத்தார்.
அது ஒருபுறமிருக்க, புதுபுது திரிபுகள் உருவெடுப்பதற்கு உலகளாவிய சூழல் உகந்ததாக இருப்பதையும் அவர் சுட்டினார்.
"இன்னும் அதிகம் பரவக்கூடிய, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய திரிபுக்கான சாத்தியம் உண்மையானதாகவே உள்ளது," என்று அவர் எச்சரித்தார்.


