டுரியன் பழங்களின் விலை இரட்டிப்பாக உயரக்கூடும்: மலேசியா
கோலாலம்பூர்: இவ்வாண்டு டுரியன் பருவக்காலத்தின்போது, அதன் விலை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய விவசாய, உணவுத் துறையின் துணை அமைச்சர் அகமது ஹம்சா தெரிவித்தார்.
மார்ச் முதல் ஏப்ரல் வரை பெய்த மழை காரணமாக, டுரியன் பழங்களின் உற்பத்தி 50 விழுக்காடு குறைந்து விட்டதே விலை உயர்வுக்குக் காரணம் என்றார் அவர்.
அது மட்டுமல்லாமல், உரங்களின் விலை, ஊழியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றின் உயர்வும் விலையேற்றத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது.
டுவிட்டருடனான தகவல் ஒப்பந்தத்தை
எலான் மஸ்க் மீறிவிட்டதாக புகார்
நியூயார்க்: டுவிட்டர் நிறுவனத்துடனான தகவல்களை வெளியிடக்கூடாது என்று கூறும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் மீறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து டுவீட் செய்துள்ள மஸ்க், "டுவிட்டர் சட்டக்குழுவினர் என்னை தொடர்புகொண்டார்கள். தானியக்க கணக்குகளின் மாதிரி அளவு 100 என்பதை வெளிப்படுத்திவிட்டேன் என்றார்கள். எனவே, தகவல்களின் ரகசியம் காக்கும் ஒப்பந்தத்தை நான் மீறிவிட்டதாக அவர்கள் புகார் கூறினர்," என்று குறிப்பிட்டிருந்தார்.
டுவிட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கான எலான் மஸ்க்கின் ஒப்பந்தம் சில வாரங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.
ஆனால், போலி கணக்குகள் குறித்த தகவல்களை அறிவதற்காக, இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று மஸ்க் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் மூன்று பிள்ளைகள், மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதில் மாண்ட பிள்ளைகள் 4 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியது.
இதற்கிடையே, பெஷாவரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த மார்ச் 4ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹாசன் ஷாவும் அவனது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் சொன்னது.

