நம்மில் பலருக்கும் தேர்வில் காப்பியடித்த அனுபவம் இருக்கும். மேசையில் சிறிய எழுத்துகளில் எழுதி வைப்பது முதல் நகல் எடுத்து வைப்பது வரை பல விதங்களில் காப்பியடித்து இருப்போம். இப்படி காப்பியடிக்கும்போது மாட்டியும் இருப்போம்.
தேர்வும் காப்பியடிப்பதும் எப்போதும் பிரிக்க முடியாதவையாகவே இருந்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களிடம் சிக்காமல் தேர்வில் காப்பியடிப்பவரை நாம் விழந்து பார்த்திருப்போம். ஆனால், இதையும் விஞ்சும் அளவிற்கு ஸ்பெயினில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அங்குள்ள மலகா சட்ட பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர், தேர்வின்போது முழுப் பாடத்தையும் 11 பேனாக்களின்மேல் சுருக்கமாகப் பொறித்துக் காப்பியடித்தார்.
முதலில் பேராசிரியருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. அதிகமான பேனாக்களை மேசை மீது வைத்திருந்ததால் பேராசிரியர் அதை உற்று நோக்கியபோதுதான் அவற்றின்மேல் சிறுசிறு எழுத்துகள் இருந்தை அவர் கவனித்தார். இதையடுத்து தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி மாணவரை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டித்தது.
இந்நிலையில் லூசி என்ற பேராசிரியர் இந்தச் சம்பவத்தைப் பற்றி புகைப்படத்துடன் தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது, மாணவரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது என அவர் கருத்துரைத்தார். இதையடுத்து அவரின் பதிவைப் பார்த்த பலரும் அந்த மாணவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


