அமெரிக்காவில் மறுபடியும் துப்பாக்கிச்சூடு; ஐவர் மரணம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வட கேரொலைனா மாநிலத்தின் தலைநகர் ராலெயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பணியில் இல்லாத காவல்துறை அதிகாரி உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொரு காவல்துறை அதிகாரி உட்பட மேலும் இருவர் காயமடைந்தனர். ஆகக் கடைசி நிலவரப்படி அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் 'நியூஸ் ரிவர் கிரீன்வே' எனும் பகுதிக்கு அருகே சம்பவம் நிகழ்ந்தது. சந்தேக நபரைத் தேடும் பணியில் பல சட்ட ஒழுங்கு அமைப்புகள் ஈடுபட்டன.
சுமார் மூன்று மணிநேரத்துக்குப் பிறகு காவல்துறையினர் அவரைப் பிடித்தனர். சந்தேக நபர் ஓர் இளம் குற்றவாளி என்றும் அவர் ஒரு வெள்ளை இன ஆடவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டு: அவமானத்தை
தவிர்த்த யுனைடெட்
மான்செஸ்டர்: யூயேஃபா யுரோப்பா லீக் காற்பந்துப் போட்டியின் 'இ' பிரிவு ஆட்டத்தில் சைப்பிரஸ் நாட்டைச் சேர்ந்த ஒமோனியா நிக்கோசியா குழுவை மிகவும் சிரமப்பட்டு 1-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்.
ஆட்டத்தின் கடைசி தருணங்களில் கோலைப் போட்டார் யுனைடெட்டின் ஸ்காட் மெக்டாமினே (படம்). இந்தப் பருவத்தின் யூரோப்பா லீக் போட்டியில் சிறிய குழுக்களையும் எளிதில் வெல்லத் தவறியுள்ளது யுனைடெட்.
விளையாட்டு: பதவி விலகும்
'லயனசஸ்' பயிற்றுவிப்பாளர்
'லயனசஸ்' என்றழைக்கப்படும் சிங்கப்பூர் தேசிய பெண்கள் காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளரான ஸ்டீவன் இங் இம்மாதம் 31ஆம் தேதியன்று பதவி விலகுவார் என்று சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது. துணைப் பயிற்றுவிப்பாளரான ராத்னா சுஃபியான் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராகப் பதவி வகிப்பார்.

