நிதி அமைச்சராக ஜெரமி ஹண்ட் நீடிக்கிறார், உள்துறை அமைச்சராக சுவெல்லா பிரேவர்மன்
லண்டன்: பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் டாமினிக் ராப், 48, துணைப் பிரதமராகவும் நீதித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த பிரதமராவதற்கு திரு ரிஷி சுனக்கிற்கு திரு ராப் பெரும் ஆதரவாளராக இருந்துள்ளார். முந்திய பிரதமர் போரிஸ் ஜான்சனின்கீழ் திரு ராப் இவ்விரு பதவிகளையும் வகித்திருந்தார். சொல்லப் போனால், கொரோனா தொற்று காரணமாக 2020ல் திரு ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, திரு ராப்தான் தற்காலிகமாக தலைமைப் பொறுப்பில் இருந்தார்.
நிதி அமைச்சராக திரு ஜெரமி ஹண்ட்டை பிரதமர் சுனக் மீண்டும் நியமித்தார். முந்திய பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் நிர்வாகம் இழைத்த பிழைகளைச் சரிசெய்யும் பணியை திரு ஹண்ட், 55, ஏற்கெனவே தொடங்கிவிட்டார்.
பதினொரு நாள்களுக்கு முன்புதான் திரு ஹண்ட்டை திருவாட்டி டிரஸ் நிதி அமைச்சராக நியமித்திருந்தார். பதவியேற்று குறுகியகாலத்திலேயே சந்தை நிலவரத்தைச் சீர்ப்படுத்துவதில் திரு ஹண்ட் வெற்றி கண்டுள்ளார்.
இதற்கிடையே, திருவாட்டி சுவெல்லா பிரேவர்மன், 42, உள்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க விதிமுறைகளை மீறியதற்காக பதவியிலிருந்து விலகிய ஒருவாரத்திற்குள் அவர் மீண்டும் அமைச்சர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து திருவாட்டி டிரஸ் விலகுவதற்கு முந்திய தினம் திருவாட்டி பிரேவர்மன் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார். திருவாட்டி டிரஸ்ஸின் அரசாங்கம் செல்லும் திசை குறித்து தமது பதவி விலகல் கடிதத்தில் திருவாட்டி பிரேவர்மன் கவலை தெரிவித்திருந்தார்.
திரு ஜேம்ஸ் கிளெவர்லி, 53, வெளியுறவு அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, திரு சுனக்கை எதிர்த்துப் போட்டியிட்ட திருவாட்டி டிரஸ்ஸை திரு கிளெவர்லி ஆதரித்து இருந்தார். பின்னர், மீண்டும் பிரதமராக முனைப்பு காட்டிய திரு ஜான்சனையும் அவர் ஆதரித்தார். ஆனால், போட்டியிலிருந்து தாம் விலகிக்கொள்வதாக திரு ஜான்சன் பின்னர் அறிவித்தார்.
2015ல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் திரு கிளெவர்லி வேகமாக உயர்ந்துள்ளார்.
திரு பென் வாலஸ் தற்காப்பு அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டார். 2019ல் முன்னாள் பிரதமர் ஜான்சன் இவரை அமைச்சரவைக்கு கொண்டு வந்ததிலிருந்து தற்காப்பு அமைச்சர் பொறுப்பில் திரு வாலஸ் நீடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பிரிட்டிஷ் பிரதமராக திரு சுனக் நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

