விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

1 mins read
1422f1f9-2976-418d-b0ce-77ada9c54857
-

மீண்டும் 'ஃபிஃபா' தலைவராகத்

தேர்ந்தெடுக்கப்பட்ட இன்ஃபன்டினோ

ஸூரிக்: அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் ஜியானி இன்ஃபன்டினோ (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தலைவர் பொறுப்புக்கு 52 வயது இன்ஃபன்டினோவை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அதனால் அவர் மீண்டும் இப்பதவியை வகிப்பது ஏற்கெனவே உறுதியான ஒன்று.

இதைத் தொடர்ந்து திரு இன்ஃபன்டினோ மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவராகப் பொறுப்பு வகிப்பார். திரு இன்ஃபன்டினோ, 2016ஆம் ஆண்டிலிருந்து சம்மேளனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

தொடரும் லிவர்பூலின் சிரமங்கள்

மட்ரிட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான லிவர்பூல், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. 'ரவுண்ட் ஆஃப் 16' எனப்படும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் லிவர்பூலை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது போட்டியின் நடப்பு வெற்றியாளரான ஸ்பெயினின் ரியால் மட்ரிட். இச்சுற்றின் முதல் ஆட்டத்திலும் 5-2 எனும் கோல் கணக்கில் லிவர்பூலை சாய்த்தது ரியால்.

6-2 எனும் மொத்த கோல் கணக்கில் ரியால் அபார வெற்றி கண்டது. அதையொட்டி இப்பருவத்தில் லிவர்பூல் எதிர்கொண்டு வந்துள்ள சிரமங்கள் தொடர்கின்றன.

இதே சுற்றின் மற்றோர் ஆட்டத்தில் ஜெர்மனியின் ஐன்ட்ராக்ட் ஃபிராங்க்ஃபர்ட்டை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது இத்தாலியின் நேப்பலி. இச்சுற்றில் மொத்தம் 5-0 எனும் கோல் கணக்கில் ஃபிராங்க்ஃபர்ட்டைத் திக்குமுக்காடவைத்தது நேப்பலி.